அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது, "பொதுச்செயலாளர்" என எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவின் மீது கேள்வி எழுப்பியிருந்தது சென்னை உயர்நீதிமன்றம். அந்த கேள்வி அதிமுகவில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் உருவாக்கிய நிலையில், புதிய மனுவை தாக்கல் செய்ய அதிமுக வழக்கறிஞர்கள் அதனைத் தயாரித்து வருகிறார்கள். இதற்கிடையே நீதிமன்றத்தில் நடந்தது குறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில், ஓபிஎஸ் உள்பட அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்ட பலரும் இந்த மனு குறித்த விவாதங்களைத் துவக்கியிருக்கிறார்கள். பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் மீண்டும் ஓபிஎஸ் உள்ளிட்ட எதிர் தரப்புக்கு சற்று நம்பிக்கை வெளிச்சம் தெரிவதாக குதூகலப்படுகின்றனர்.
இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, "இதற்கு முன்பு பெரும்பாலான தீர்ப்புகள் ஈபிஎஸ்க்கு சாதகமாக இருந்தாலும் கூட, மக்கள் மன்றம் அதை அங்கீகரிக்கவில்லை. எனவே, நீதிமன்றம் அதை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் தீர்ப்புகள் வழங்க வாய்ப்புகள் உண்டு. மக்கள் மன்றத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எழுதி வைத்த உயில் தான் பேசும் ; அதேபோல, கட்சிக்காரர்கள் மத்தியில் எம்.ஜி.ஆர் இயற்றிய கழக விதிகள் தான் பேசும். இவ்விரண்டிற்கும் எடப்பாடி பழனிச்சாமி எதிராக இருந்தாலும், ஓபிஎஸ்சுடன் ஒப்பிடும்போது, எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொள்ளப்படலாம் என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை மக்கள் மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த இயக்கத்தை உருவாக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழக விதிகளை தவறு என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அதனால், நீதிமன்ற தீர்ப்பு, விரைவில் ஒரு தெளிவான முடிவை அதிமுகவில் ஏற்படுத்தும் என்றே சொல்லலாம் " என்கிறார்.