பழங்குடியின மக்களுக்கான சாதிச்சான்றிதழ்களை வழங்காமல் அதிகாரிகள் தாமதப்படுத்துவதாகக் கூறி, பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் 80 வயது முதியவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகி இருந்த நிலையில் இந்த சம்பவம் வேதனையைத் தருவதாகவும், இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாரெட்டிகள் என்ற பழங்குடியின மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், காலம் காலமாக அவர்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் மறுக்கப்பட்டு வருகிறது. அதனால், கொண்டாரெட்டி சமுதாய மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொண்டாரெட்டி மக்களுக்காக குரல் கொடுத்து வந்த கீளப்பூடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்ற முதியவர், தமக்கு கொண்டாரெட்டி சாதிச்சான்றிதழ் கோரி கடந்த ஓராண்டிற்கு முன் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், அவருக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்படாததைக் கண்டித்து பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கொண்டாரெட்டி சாதிச் சான்றிதழ் கோரி கடந்த 38 ஆண்டுகளாக போராடி வந்ததாகவும், ஆனால், எந்த பயனும் ஏற்படாத நிலையில் தற்கொலை செய்து கொள்வதாகவும் பெரியசாமி தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கல்வியிலும், சமூகத்திலும் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்காகத் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை அனுபவிப்பதற்கான அடிப்படைக் கருவி தான் சாதிச் சான்றிதழ் ஆகும். ஆனால், 38 ஆண்டுகளாக போராடியும் சாதிச் சான்றிதழ் பெற முடியாத அவல நிலை நிலவுவது வருந்தத்தக்கது ஆகும். கொண்டாரெட்டி சமுதாய மக்கள் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் வாழ்வது வரலாற்றுரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் பட்டியலில் 12-ஆவதாக கொண்டாரெட்டிகள் சாதி இடம் பெற்றுள்ளது. பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளைச் சேர்ந்தவர்கள் சாதிச்சான்றிதழ் கோரினால், அவர்கள் அச்சாதியைச் சேர்ந்தவர்களா? என்பதை அறிந்து சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறைகளை தேசிய பழங்குடியினர் ஆணையம் வகுத்திருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பழங்குடியினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்கும் அதிகாரம் வருவாய்க் கோட்ட அலுவலர் நிலையிலான அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்தும் பழங்குடியினருக்கு மட்டும் சாதிச்சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
பழங்குடியினருக்கு உரிய கெடுவுக்குள் சாதிச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. பல தருணங்களில் அரசுத்துறை செயலாளர்களை உயர்நீதிமன்றத்திற்கு அழைத்து நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் நிலைமை மாறாதது கண்டிக்கத்தக்கது ஆகும்.
பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தாமதமின்றி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக பல போராட்டங்களையும் நடத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைவேடன் என்ற பழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு சாதிச்சான்று தொடர்ந்து மறுக்கப்படுவதைக் கண்டித்து 12.12.2000 அன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பத்தாயிரம் பேரைத் திரட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினேன். அதேபோல், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் குருமன்ஸ் சமுதாய மக்களின் நலனுக்காகவும் பா.ம.க. போராடியுள்ளது. ஆனாலும், அவர்களுக்கு இன்னும் முழுமையான சமூகநீதி கிடைக்கவில்லை.
பழங்குடியினர் சாதிச்சான்று கிடைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் உயர்கல்வி கற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் அவர்களின் முன்னேற்றத்திற்குப் போடப்படும் முட்டுக்கட்டையாக அமைந்து விடும். எனவே, இந்த விஷயத்தில் தாமதம் செய்யாமல், பழங்குடியின மக்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் சாதிச்சான்றிதழ் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.