சென்னை கலைவானர் அரங்கில் நாடாளுமன்ற திமுக மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி சிவா எழுதிய 5 நூல்கள் வெளியிட்டு விழா இன்று (05.10.2024) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். அதனை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நடிகர் பிரகாஷ் ராஜும், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “யாருடைய மிரட்டல், உருட்டல்களுக்கு எல்லாம் பயம் கொள்ளாமல் இருக்கிறோம். எதிரிகளின் வடிவங்கள் வேண்டுமானால் மாறலாம். நாம் மாறவில்லை. நமது போராட்டக்களமும் மாறவில்லை. 75 ஆண்டுகளாக திமுகவின் பெயர் மாறவில்லை, கொடி மாறவில்லை. சின்னம் மாறவில்லை. என்னைப் பற்றிக் குறிப்பிடும்போது 'கலைஞராக வாழும் தளபதி' எனத் திருச்சி சிவா எழுதி இருக்கிறார். என் மீதான அன்பு மிகுதியால் அப்படி எழுதி இருப்பார். அதனால் அந்த தலைப்பு வைத்திருக்கிறார். அதில் ஒரு திருத்தம். கலைஞராக வாழக் கலைஞரால் மட்டும்தான் முடியும். கலைஞர் வழியில் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். இனி இவர்தான் எங்கள் தளபதி என என்னை முதலில் அறிவித்ததே சிவாதான். ” எனப் பேசினார்.
மேலும் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “மானமிகு திராவிட மாணவர் படை தமிழ் மானம் காக்கத் துடித்தெழுந்து அரசியல் தலைமையேற்ற புரட்சிகர வரலாற்றின் அடையாளம் என் தோழன் திருச்சி சிவா. அவரது போராட்ட வாழ்வையும் - சொற்களாக விளைந்த சிந்தனைகளையும் நூல்களாக்கி வழங்கியிருக்கிறார். இனப்பகைவர்களை வீழ்த்த - இனமானம் காக்க இன்னும் பல சிவாக்கள் உருவாக இந்த நூல்களைப் போல் ஏராளமான நூல்கள் படைக்கப்பட வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.