டெல்லியில் இன்று காலையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தை தொடங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று இரவு 8 மணிக்கு மேல் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று காலை 8 மணி அளவில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரியன் ஆகியோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இரவு 8 மணிக்கு மேல் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத்தை நிறைவு செய்தார்.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா சந்திரபாபுவுக்கு தண்ணீர் கொடுத்தார். அதை அருந்தி போராட்டத்தை நிறைவு செய்தார் சந்திரபாபு நாயுடு.