நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் முடிந்து, அடுத்தகட்டமாக கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பிரச்சாரங்களை துவங்கியுள்ளனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் கடந்த சனிக்கிழமை பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தியதாகவும், பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாகவும் கருத்துகள் எழுந்தது. இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம்தமிழர் கட்சி சீமான் மீது விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது 2 பிரிவுகளில் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.