குடியுாிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இஸ்லாமிய அமைப்பினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழக சட்டசபையில் குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் குமாி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமிய அமைப்பினா் இன்று நாகா்கோவில் கலெக்டா் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனா். இதையொட்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் ஆட்சியர் அலுவலகத்தின் முன் குவிந்தனா். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மதியம் 12 மணியளவில் கலெக்டா் அலுவலகம் முன் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் "மத ரீதியாக நாட்டை துண்டாக்காதே" என கோஷம் எழுப்பி, மத்திய அரசின் இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீா்மானமாக நிறைவேற்றவும் கோாிக்கை வைத்தனர். இதில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனா். இதையொட்டி கலெக்டா் அலுவலகத்தை சுற்றி 500 க்கு மேற்பட்ட போலீசாா் குவிக்கப்பட்டிருந்தனர்.