ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 77 பேர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க. தனது பணிமனை திறப்பு விழாவை 10ந் தேதி நசியனூர் ரோட்டில் நடத்தியது. தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் இதில் கலந்துகொண்டு பணிமனையைத் திறந்து வைத்தார். இதற்காக நசியனூர் சாலையின் இருபுறம் தே.மு.தி.க. கொடிக்கம்பங்கள் நடப்பட்டு இருந்தன. இதற்கான அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு வந்த பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் வீரப்பன்சத்திரம் போலீசார் கொடிக்கம்பங்களை அகற்ற வலியுறுத்தினர். அதற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து பறக்கும் படை சார்பில் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் அமைத்த தே.மு.தி.க. மாவட்ட துணைச்செயலாளர் ரங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.