திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை.வைகோவை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது “புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. புதுக்கோட்டையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. தண்ணீர் பிரச்சனையை போக்க லாரியில் தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ரூ.100 கோடி செலவில் பழைய பைப் லைன் மாற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ரூ.2,600 கோடி பணிக்கான திட்டத்தில், ரூ.1,550 கோடியில் பணிகள் டெண்டர் விடப்பட்டு திட்டம் தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மன்னர் நகரமாக இருப்பதால் மாநகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளோம்”.
“மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளதால் வேலை வாய்ப்பு கிடைக்கும், குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும். அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு திருச்சிக்கு இணையாக புதுக்கோட்டை மாற்றப்படும். புதுக்கோட்டை மாநகராட்சிக்கான பணிகளை நாங்கள் கொண்டு வரும் போது துரை வைகோ துணையாக, உறுதியாக இருப்பார்கள். மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதியை அவர் பெற்று தருவார். மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறதியளிக்கிறேன். கடந்த தேர்தலில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்ற வாக்குகளை விட துரை வைகோ அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது நமது கடமை” என்றார்.
கூட்டத்தில் துரை வைகோ பேசுகையில் “புதுக்கோட்டை நகரில் 2 ரெயில்வே கேட்களில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட கால கோரிக்கையான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உறுதியாக இருப்பேன். மக்கள் எளிதில் அணுகும் வகையில் இருப்பேன். எனக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வையுங்கள்” என்றார்.
முன்னதாக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார். ஆதனக்கோட்டை கடைவீதி, ஆகிய இடங்களில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் துரை வைகோ உடன் இருந்தார். கூட்டத்தில் மாவட்ட மதிமுக செயலாளர் கலியமூர்த்தி, முத்துராஜா எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் லியாகத் அலி, புதுக்கோட்டை நகரச் செயலாளர் செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ அரசு, மாவட்ட துணைச் செயலாளர் மதியழகன், ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.