எங்கு வேண்டுமானாலும் கடன் வாங்குங்கள். சில வங்கிகள் கொடுக்கத் தயாராக உள்ளார்கள். நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தர்மபுரி மாவட்டத்தின் முதன்மை பிரச்சனை ஒகேனக்கல் தர்மபுரி உபரிநீர்த் திட்டம். அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு காரணங்கள் வேண்டாம். தென்பெண்ணையில் ஆண்டுக்கு 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளது. உபரி நீர் கடலில் கலக்கிறது. அதை இத்திட்டத்தில் சேமிக்க வேண்டும். இதுதான் நீர் மேலாண்மை. அடுத்த 5 ஆண்டுகளில் முதல்வர் 1 லட்சம் கோடியை நீர்மேலாண்மைக்குச் செலவிட வேண்டும். எங்கு வேண்டுமானாலும் வாங்குங்கள். சில வங்கிகள் கொடுக்கத் தயாராக உள்ளார்கள். தமிழகத்தில் இதுபோன்ற நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்” என்றார்
மேலும் பேசிய அவர், “2026ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம். தேர்தலுக்கு 6 மாதம் முன்பு எங்கள் அறிவிப்பு வரும். பார் நடத்துவது அரசாங்க வேலை கிடையாது. அது சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அதை மேல்முறையீடு செய்து ஸ்டே வாங்கியுள்ளனர். எந்த சட்டத்தில் பார் நடத்தலாம் என்ற அதிகாரம் உள்ளது” எனக் கூறினார்.