சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட மலைவாழ் கிராமம் வலசகல்பட்டி. இங்குள்ள மலைவாழ் மக்களிடம் சேலம் மாநகராட்சியின் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது.
வலசகல்பட்டி மக்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்காமல் நீண்ட வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இந்த பிரச்சனையில் தலையிட்டு அம்மக்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கச் செய்திருக்கிறார். மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு கல்விக் கடன் பெற்றுத்தந்துள்ளார். மேலும், சமீபகாலமாக வலசகல்பட்டி கிராம மக்கள், மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்தத் துவங்கியுள்ள நிலையில், மொபைல் ஃபோன்களுக்கான சிக்னல் முழுமையாக கிடைக்காததை ரேகா பிரியதர்சினியிடம் அம்மக்கள் தெரிவிக்க, சிக்னல் டவர்களை கூடுதலாக அமைக்க சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். உடனடியாக ஸ்பாட்டுக்கு விரைந்து சென்ற மொபைல் நிறுவனம், சிக்னல் பிரச்சனைகளை சரி செய்யவும் கூடுதல் டவர் அமைக்கவும் ஆய்வுகளை நடத்தியிருக்கிறது.
தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை தி.மு.க. தலைவர்கள் நடத்தி வரும் நிலையில், வலசகல்பட்டியில் கிராமசபைக் கூட்டத்தை நடத்த இரு நாட்களுக்கு முன்பு அங்கு சென்றார் ரேகா பிரியதர்ஷினி. தங்கள் கிராமத்துக்கு வந்த அவருக்கு, கிராமங்களின் உற்சாகமான கொண்டாட்டங்களில் ஒன்றான கும்மியடித்து, பாட்டுப்பாடி வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் வரவேற்பு வேண்டாம் என ரேகா பிரியதர்ஷினி தடுத்தப் போதும், “மலைவாழ் மக்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்கவே அரசியல்வாதிகள் விரும்புவதில்லை. ஆனால், நீங்களோ எங்கள் பிரச்சனைகளை கேட்டதோடு அதனை தீர்த்தும் வைத்திருக்கிறீர்கள். அதனால், எங்களின் சந்தோஷத்திற்காக இந்த வரவேற்பை ஏற்க வேண்டும்” எனச் சொல்லி கும்மியடித்து வரவேற்றுள்ளனர்.