


நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில் திமுக 133 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, நேற்று (05/05/2021) மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, நாளை (07/05/2021) காலை 09.00 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைக்கிறார். அத்துடன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. இந்நிலையில் நாளை மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் நேரடியாக தலைமைச் செயலகம் செல்லவுள்ளார். அதனால் தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் பெயர் எழுதப்பட்ட பெயர்ப் பலகை தயாராகி வருகிறது.