Skip to main content

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் பாஜக? - நிதிஷ்குமார் விளக்கம்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

bjp try to confusing opposition party patna meeting nitish kumar explain

 

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இதற்கிடையில் பீகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

 

இது தொடர்பாகச் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்,  உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து ஓரணியாகச் செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 23 ஆம் தேதி பீகாரில் பிரமாண்டமாகப் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அழைப்புகளும் முறைப்படி எதிர்க்கட்சிகளுக்கு விடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

 

இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த மத்திய பாஜக அரசுக்கு விருப்பம் தான். கர்நாடக மாநிலத்தில் நடந்ததைப் போல மற்ற மாநிலங்களில் நடந்துவிட்டால் என்ன செய்வது என்றும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுப்பெற்றுவிட்டால் நாம் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள் முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம்” என்றார்.

 

இந்நிலையில் ஹிந்துஸ்தான் அவாம் கட்சியின் நிறுவனரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் சுமன் சமீபத்தில் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் வகித்த தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக ரத்னேஷ் சதாவு பதவி ஏற்றுக்கொண்டார். இது குறித்து ஜிதன் ராம் மஞ்சி கருத்து தெரிவிக்கையில், "தனது மகன் பதவி விலகலுக்கு நிதிஷ்குமார் தான் காரணம். ஹிந்துஸ்தான் அவாம் கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைக்க கட்டாயப்படுத்தினார்." எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து நிதிஷ்குமார் கூறுகையில், "பாஜகவின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சிகளை ஜிதன்ராம் மாஞ்சி உளவு பார்க்கிறார். வரும் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை ஜித்தன் ராம் மஞ்சி கசிய விடுவார் என்பதாலேயே ஹிந்துஸ்தான் அவாம் கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைக்க சொன்னேன்" என விளக்கமளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்