ஆளுங்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து இப்படி தோல்வி அடைந்திருப்பது கட்சி தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த தோல்விக்கான காரணம் என்ன, கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் வாக்கு வங்கி சரிவதற்கு என்ன காரணம் என்பதை கட்சி தலைமை ஆராய்ந்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக பாஜகவின் தோழமைக் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால்தான் தமிழகத்தில் பாஜக-அதிமுக தலைமையில் இருந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சென்றிருந்தனர். அதே சமயத்தில் தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதால்தான்,இந்த பதவியேற்பு விழாவில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடம் கோபத்தை காட்டியுள்ளனர். கட்சி நிர்வாகிகளை அழைத்து விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அப்போது இவ்வளவு வாக்குகள் குறைவாக பெறக் காரணம் என்ன, தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதற்கான காரணம் என்ன, தேர்தலின் போது கூட்டணி கட்சியினர் தேமுதிகவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லையா, தேர்தலின் போது தேமுதிக நிர்வாகிகள் பணம் செலவு செய்தார்களா, தொண்டர்களின் கணிசமான வாக்குகள் எங்கே போனது என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவர்கள் கேட்டதாக தெரிகிறது. மேலும் நிர்வாகிகளை மாற்றி துடிப்பான இளைஞர்களை நியமிக்க போவதாகவும் விஜயகாந்த், பிரேமலதா கூறியதாக கூறப்படுகிறது.