Skip to main content

தமிழக எல்லைக்குள் புகுந்து ஆந்திர காவல்துறை  கொடூரச் செயல்; திருமாவளவன் கண்டனம் 

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

Atrocious act of Andhra Police by entering Tamil Nadu territory; Thirumavalavan condemned

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த குறவர் சமூகத்தினர் மீது கொடூரமான அரச வன்கொடுமை நடந்துள்ளது என்றும் ஆந்திரப் பிரதேச மாநில காவல்துறையினரின் குரூர வெறியாட்டம் நடத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள புலியாண்டப்பட்டியில் வசிக்கும் குறவர் சமூகத்தைச் சார்ந்த அய்யப்பன் என்பவரை ஆந்திர மாநிலம், சித்தூர்  காவல்துறையினர் திருட்டு வழக்கில் கைது செய்துள்ளனர். அதனைத் தட்டிக் கேட்ட அவரது குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து சித்தூருக்குக் கொண்டு சென்றுள்ளனர். அது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு இணைய வழியாகப் புகார் செய்துள்ளனர். அதனால், ஆத்திரமடைந்த சித்தூர் காவல் நிலையத்தினர் மீண்டும் தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து மேலும் மூவரைக் கைது செய்துள்ளனர். மொத்தம் ஒன்பது பேரைக் கைது செய்து சித்தூர் காவல் நிலையத்திலேயே வைத்து விசாரணை என்னும் பெயரில் குரூரமான வகையில் அரச வன்கொடுமையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.​

 

குறிப்பாக, பெண்களைத் துன்புறுத்தி வல்லுறவு, வன்கொடுமைக்கு முயன்றுள்ளனர் என்றும்; அவர்தம் உயிர்நிலையில் மிளகாய்ப் பொடியைக் கொட்டி வதைத்துள்ளனர் என்றும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டதன் பின்னர், அவர்களில் இருவரைத் தவிர மற்றவர்களை விடுவித்துள்ளனர். 

 

ஆனால் மற்றவர்கள் சிறைப்படுத்தப்பட்டார்களா அல்லது அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை. எனவே, அவ்விருவரின் நிலையைக் கண்டறியவும், உயிருடனிருந்தால் அவர்களை மீட்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம். பெண்கள் மற்றும் சிறுவர் உள்ளிட்டோர் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டிருந்தால் அவற்றை விலக்கிட ஆவண செய்ய  வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திட தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இது தொடர்பாக வருகின்ற 26 ஆம் தேதி விசிக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்