உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிற நிலையில், உ.பி.யில் உள்ள ராம்பூரில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் பரப்புரை மேற்கொண்டார்.
பாப்புரையில் பேசிய அவர், “சமாஜ்வாதிக்கு ராம்பூரில் உள்ள வரவேற்பினைப் பார்த்து ஆளும் அரசு பயப்படுகிறது. இதன் காரணமாகவே இங்கு வெற்றி பெற்ற என்னை சிறைத்தண்டனையை காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்தனர். என்னிடம் இருந்தும் என் மகன்களிடம் இருந்தும் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என தெரியவில்லை. அட்டிக் அகமதுவை சுட்டுக் கொன்றது போல் என்னையும் சுட்டுக்கொல்ல முயற்சி செய்கிறார்களா என்றும் தெரியவில்லை” என்றார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ராஜுபால் கொலை செய்யப்பட்ட வழக்கில் உ.பியில் தாதாவாக இருந்து அரசியலுக்கு வந்தவரான சமாஜ்வாதி முன்னாள் எம்.பி. அட்டிக் அகமது மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜுபால் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அட்டிக் அகமது மற்றும் அஷ்ரஃப் மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட போது இருவரும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது செய்தியாளர்கள் போல் நின்றிருந்த இருவர் அட்டிக் மற்றும் அஷ்ரஃப் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.