தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிட்டவரை வெற்றி பெறச் செய்வதற்கு அமைச்சர் கருப்பணன் முயற்சி செய்தார் என்றும், பின்னர் அமைச்சரின் இந்த திட்டத்தை அறிந்து செயல்படுத்த விடாமல் தடுத்தோம் என்று தோப்பு வெங்கடாச்சலம் தரப்பு தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நேற்று பேசும் போது, பெருந்துறை தொகுதியில் செயல்படுத்தப்பட உள்ள கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக அமைச்சர் கருப்பணன் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதே போல் உள்ளாட்சி தேர்தலில் பெருந்துறை ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராகவும், சுயேட்சைகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டார். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டத்தையே ஒரு அமைச்சர் தடுக்க முயல்வது வேடிக்கையாகவும், அதிருப்தியாகவும் உள்ளது என்றார். மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள ஒட்டுமொத்த பதவிகளையும் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே வாங்கி கொடுத்துள்ளார். ஊர் முழுவதும் சாயக்கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் குத்து பாடல்களுக்கு அமைச்சர் ஆட்டம் போடுவது விநோதமாக உள்ளது.
கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஒருமுறை கூட ஆலோசனை கூட்டம் நடத்தியது கிடையாது. இதே நிலை நீடித்தால், அ.தி.மு.க. என்ற கட்சி முழுமையாக கரைந்துவிடுமே தவிர, கரைசேர வாய்ப்பு இல்லை. எனவே, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் கட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால் அமைச்சர் கருப்பணனை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது. இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் கூறினார்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனுக்கும், பெருந்துறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக கட்சிக்குள் உட்கட்சி பூசல் நடந்து வருகின்றன. கருப்பணனை அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் நீக்குமாறு கட்சி தலைமையிடம் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்படத்தக்கது. சொந்த கட்சிக்குள் அதும் அதிமுக கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி பூசலால் அதிமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கொங்கு மண்டலத்தில் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி பூசல் கட்சியை பலவீனப்படுத்தும் என்று அதிமுக நினைப்பதாக கூறுகின்றனர்.