அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு இன்று (19.05.2019) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன்.
அப்போது அவர், வாக்குப்பதிவு நடக்கும் சில இடங்களில் திமுகவினர் தடுக்கின்றனர். கார்விழியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் கொடுத்து தப்பித்து ஓடியிருக்கிறார்கள். ஓட்டு போட்டுவிட்டு வாருங்கள் இரண்டாயிரம் தருகிறோம் என்று மக்களிடம் ஜெராக்ஸ் கொடுக்கிறார்கள். தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதிலேயே இருக்கிறார்கள்.
ஆர்.கே.நகரைப்போல ஜெராக்ஸ் போட்டு கொடுத்ததை போலீசார் பிடித்துள்ளனர். திமுக வேட்பாளரின் இந்த செயலால் மக்கள் ஓட்டு போட முடியாமல் பதட்டத்தில் உள்ளனர். காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு கார்விழி ஊராட்சியில் காவல்துறையினர் இருக்கிறார்கள். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று இதுபோன்று செய்கின்றனர். திமுகவினர்தான் ஒரு அசாதாரண சூழலை ஏற்படுத்துகின்றனர் என்றார்.
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இடைத்தேர்தல் நடக்கும்போது அரவக்குறிச்சியில் உள்ள வாக்காளர்களை திமுகவினர் ஆங்காங்கே அடைத்து வைத்துக்கொண்டு 3 மணிக்கு மேல் இரண்டாயிரம் ரூபாய் தருகிறோம் என்று எல்லா பகுதியிலும் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
திமுகவின் ஒன்றிய பொருளாளர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டார். வேலாயுதம் பாளையம், தோட்டக்குறிச்சி, நொய்யல் இந்த பகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் வந்துவிடும் என்ற தோல்வி பயத்தால் எதிர்க்கட்சியின் வேட்பாளர் இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
200 மீட்டர் தொலைவில் இருக்கிறோம். பட்டா இடத்தில் இருக்கிறோம் என்று வாக்குவாதம் செய்கின்றனர். முல்லை நகர், மலையடிவாரம், புகலூர் நான்கு ரோடு, காந்தி நபர் பகுதியில் இரண்டாயிரம் தருவதாக கூறி வாக்காளர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். நம்பர் போட்டு ஸ்டார் போட்டு இன்னொரு டோக்கன் கொடுத்துள்ளனர். தோல்வி பயத்தில் இதுபோன்று செய்கின்றனர். பேச்சுப்பாறை என்ற இடத்தில் 110 உள்ள வாக்குகளில் 20 பேர்தான் வாக்களித்துள்ளனர். பணம் தருவதாக கூறி உட்கார வைத்துள்ளனர். வாக்குப்பதிவை குறைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். காவல்துறைக்கு சென்றால் சரியான நடவடிக்கை இல்லை. வேலாயுதம்பாளையம் பகுதி முழுவதும் இதே நிலைமைதான் இருக்கிறது. இவ்வாறு கூறினார்.