அண்ணாமலைக்கு மைக் கிடைத்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசுகிறார். அது ஒரு வியாதி என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள வி.புதூர் பகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட நிகழ்வு அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், “என் மனைவி ஜெயலலிதாவைவிட 1000 மடங்கு பெரியவர் என அண்ணாமலை சொல்கிறார். அரசியலில் கத்துக்குட்டி அண்ணாமலை., முதலமைச்சர்களின் கூட்டத்திற்கு ஜெயலலிதா செல்லும் போது நாட்டில் உள்ள அத்துனை முதலமைச்சர்களும் எதிர்பார்த்து நின்று வரவேற்பார்கள். ஐபிஎஸ் ஆகி ட்ரான்ஸ்ஃபரில் இங்கு வந்துள்ளார். ரெபுடேஷன். அரசியலுக்கு ரெபுடேஷனில் வந்தவர் அண்ணாமலை. நாளை அரசியல் மாற்றம் வந்தால் மீண்டும் ஐபிஎஸ் வேலைக்கு எழுதிக் கொடுத்து சென்று விடுவார். கூட்டணிக் கட்சி என்பதால் மதிக்கிறோம். நயினார் நாகேந்திரனை பாஜகவில் சேர்த்துக்கொண்டீர்கள். நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அது அவரவர் விருப்பம்.
பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் ஏதோ கருத்து வேறுபாட்டால் அதிமுகவில் இணைந்தார். அவர் பாஜக, மோடி பிடிக்கவில்லை என சொல்லவில்லை. அண்ணாமலை சரியில்லை என்றுதான் சொன்னார். அண்ணாமலை கட்சியை காலி செய்துவிடுவார் என சொன்னார். அரசியல்வாதி பேச்சை அளந்து பேச வேண்டும். மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா? அவருக்கு அது ஒரு சீக்கு போல இருக்கிறது. அண்ணாமலைக்கு அது வியாதி. மைக்கை பார்த்துவிட்டால் போதும் சடசட என பேசுகிறார். இப்பொழுது அண்ணாமலை பேச ஆரம்பித்தாலே சேனலை மாற்றுகிறார்கள். இது இப்படியே சென்றால் பாஜக தரம் போய்விடும். அதிமுகவை உரசிய பிறகு யாரும் ஜெயித்ததாக வரலாறு இல்லை” எனக் கூறினார். முன்னாள் அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில் பாஜக நிர்வாகிகள் பலர் இணையத்தில் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.