Skip to main content

“அண்ணாமலை இதனை பகிரங்கமாக சொல்ல வேண்டும்” - ஜெயக்குமார் கெடு

Published on 30/04/2023 | Edited on 30/04/2023

 

"Annamalai should say this openly"- Jayakumar

 

கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அண்ணாமலையும் உடன் இருந்தார். இந்த சந்திப்பு குறித்து பாஜக மாநில பொருளாளர் சேகர் தனது ட்விட்டர் பதிவில், “1 vs 6 மலைக்கு சமம் இல்லை என்பதால் ஆறு தலைகளுடன் நடந்த கூட்டம். தமிழகத்தில் எந்த முடிவையும் மலையே எடுப்பார். அவர் இல்லாமல் டெல்லி தனியாக முடிவெடுக்காது என்பதை ஆறாக உடைந்து போன அதிமுகவுக்கு உணர்த்திய அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தோழமை கூட்டணியின் அடிப்படையில் மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சரை நாங்கள் சந்தித்தோம். சந்திப்பின் போது அண்ணாமலையும் இருந்தார். சந்திப்பிற்கு பின் பாஜகவை யாரும் விமர்சனம் செய்வது இல்லை. எங்களுக்கு விமர்சனம் செய்யத் தெரியாதா? எல்லோரையும் கண்ட்ரோல் செய்து வைத்துள்ளோம். ஒரு கட்டுப்பாடு உள்ளது. அந்த கட்டுப்பாடு ஏன் அந்த கட்சியில் இல்லை.

 

பாஜகவின் மாநில பொருளாளர், அதிமுக தலைமை சரியில்லை என்றும் ஐந்து ஆறாக கட்சி உடைந்துவிட்டது என்றும் சொல்கிறார். கட்சி உடைந்துவிட்டதா? இன்று ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிசாமியின் கீழ் கட்சி சென்று கொண்டுள்ளது. அப்படி இருக்கும் போது ஆறாக உடைந்துவிட்டது என்கிறார். இவருக்கு என்ன மஞ்சள் காமாலையா. இது அண்ணாமலை சொல்லி நடக்கிறதா? சொல்லாமல் நடக்கிறதா? அண்ணாமலை தெளிவுபடுத்த வேண்டும். 

 

இவை எல்லாம் அண்ணாமலை சொல்லி நடக்கிறதா? சொல்லாமல் நடக்கிறதா? அதுதான் கேள்வி. இன்று பகல் 1 மணி அளவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறாராம். அப்போது அண்ணாமலை இதுகுறித்து பகிரங்கமாக எங்கள் பொருளாளர் எனக்கு தெரியாமல் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். நான் அவரை கண்டிக்கிறேன் எனச் சொல்ல வேண்டும். அப்படி தெரிவித்தால் தான் அவர் மேல் சந்தேகம் இருக்காது. அப்படி இல்லை என்றால் அண்ணாமலை சொல்லித்தான் செய்கிறார்கள் என நினைக்க வேண்டி வரும்” எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.