
கோவை நவக்கரை பகுதியில் பாஜக சார்பில் விவசாயிகள் பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காசு கொடுத்து ஓட்டு கேட்பது என்பது புற்றுபோய் போன்றது. நான் பாஜக தலைவராக சொல்லவில்லை. தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சொல்லுங்கள் என அதிகமானோர் சொல்கிறார்கள். தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் சொன்னால் கூட உங்களைப் போன்றவர்கள் குடிமகன்களாக கோரிக்கை வைக்கலாம்.
தமிழக மக்கள் இம்மாதிரியான தேர்தலை ஏற்கிறார்களா. இந்த அராஜக தேர்தலை சந்திக்கத்தான் இருக்கிறோமா? ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் அரசியல் கட்சிகள் 20 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளார்கள். மிச்சமுள்ள மாநிலங்கள் முன்னேறி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் அதல பாதாளத்தில் இருந்தது. இன்னும் ஒரு 5 வருடத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை விஞ்சிவிடும்.
மக்கள் இந்த அரசியலை ஆதரித்து ஓட்டு போடணுமா? சாமானிய மனிதனாக கொதித்துப் போய் இந்த கேள்வியை கேட்கிறேன். தேர்தல் ஆணையத்திற்கு நானும் கடிதம் எழுதியுள்ளேன். அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 6 மாதம் கழித்து மீண்டும் தேர்தல் நடந்தால் இதெல்லாம் நடக்காதா?” எனக் கூறினார்.