Skip to main content

“விஷப் பரீட்சைக்குள் காவல்துறை வரவேண்டாம்” - அண்ணாமலை

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Annamalai criticized police department for flagpole

 

சென்னை பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு 100 அடி உயரம் கொண்ட பா.ஜ.க. கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட இருந்தது. அனுமதியின்றி அக்கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் அந்தக் கொடிக்கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக ஜே.சி.பி. வாகனம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் ஜே.சி.பி. வாகனத்தை சேதப்படுத்த முயன்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே பா.ஜ.க.வினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

இதனையடுத்து, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தாக்கியதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு நவ.3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டது. 

 

இதனையடுத்து, இந்த சம்பவத்தைக் கண்டித்து பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக  கொடிக்கம்பங்கள் என 1000 கொடிக்கம்பங்கள் நடப்படும்” என்று அறிவித்தார். அதன்படி, நேற்று (01-11-23) தமிழகம் முழுவதும் 1400 இடங்களில் பா.ஜ.க கொடிக்கம்பங்கள் நடுவதற்கு பா.ஜ.க கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். 

 

அந்த வகையில், கோவை மாவட்டம் மசக்காளிப்பாளையத்தில் பா.ஜ.க கட்சியினர் அனுமதியின்றி கொடிக்கம்பம் நடப்போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து, நேற்று காலை கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் பா.ஜ.க கட்சியினர் திரண்டு வந்து கொடிக்கம்பத்தை நட முயன்றனர். அப்போது அங்கு இருந்த போலீஸார், அனுமதி இல்லாமல் கொடிக் கம்பம் நடக்கூடாது என்று அவர்களிடம் தெரிவித்தனர். இதனால், போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அவர்கள் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, பாலாஜி உத்தம ராமசாமி, துணைத் தலைவர் கனக சபாபதி உள்பட 57 பேரை போலீஸார் கைது செய்தனர்.

 

அதேபோல், கடலூர் மாவட்டத்தில் பா.ஜ.க சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் இப்ராகிம் உள்பட 11 பேரையும், திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்டத் தலைவர் தனபாலன் உள்பட 75 பேரையும் அனுமதியின்றி கொடிக்கம்பங்களை நட முயன்றதாக காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், பழனி என மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் அனுமதியின்றி கொடியேற்றியதாகவும், கொடிக்கம்பங்களை நட முயன்றதாகவும் ஏராளமான பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

 

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஒருவர் தனது சொந்த இடத்தில் கொடிக்கம்பத்தை வைப்பதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. வீட்டில் கொடிக் கம்பத்தை ஏற்றியவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளார்கள். ஏற்கனவே இருந்த கொடிக் கம்பத்தை அகற்றி அருகில் புதிய கொடிக் கம்பத்தை வைத்தால் அதையும் தடுக்கிறார்கள். காவல்துறைக்கு நிறைய வேலை இருக்கிறது. ஆனால், காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி கொடிக் கம்பத்தை அகற்றுகின்றனர். தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே தான் போட்டி. இந்த விஷ பரீட்சைக்குள் காவல்துறை வரவேண்டாம்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நேற்று சூரத், இன்று இந்தூர்; தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க-வின் சூழ்ச்சி?

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
BJP's election maneuver? on Surat and Indore

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

BJP's election maneuver? on Surat and Indore

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் கடந்த 24ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர். இதனை தொடர்ந்து, சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளின் போது, காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு பா.ஜ.கவில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 என நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகிறது. 

BJP's election maneuver? on Surat and Indore

அதன்படி, மத்தியப் பிரதேசத்தில், கடந்த 19ஆம் தேதி 6 தொகுதிகளுக்கும், கடந்த 26ஆம் தேதி மீதமுள்ள 6 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவி நடைபெற்றது. நான்காம் கட்டமாக நடைபெறும் தேர்தலில் இந்தூர் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அக்‌ஷய் கண்டி பாம் என்பவர் அறிவிக்கப்பட்டார். அதே போல், பா.ஜ.க சார்பில் தற்போதைய சிட்டிங் எம்.பியான சங்கர் லால்வாணி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 25ஆம் தேதியுன் நிறைவடைந்து, கடந்த 26ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற நேற்று (29-04-24) கடைசி நாள் ஆகும். 

இந்த சூழ்நிலையில், இந்தூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் கண்டி பாம் நேற்று (29-04-24) தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், அக்‌ஷய் கண்டி பாம் வாபஸ் பெற்ற அடுத்த சில மணி நேரத்திலேயே பா.ஜ.க அலுவலகத்துக்கு சென்று பா.ஜ.கவில் இணைந்துள்ளார். ஏற்கனவே, சூரத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் செய்து பா.ஜ.க.வில் இணைந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.