Skip to main content

“இப்பவே முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது..” - அண்ணாமலை 

Published on 02/04/2023 | Edited on 02/04/2023

 

Annamalai addressed press in chennai
கோப்புப் படம் 

 

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு டெல்லி செல்வதற்காக சென்னை விமானநிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அதேபோல், அதிமுக எஸ்.பி.வேலுமணியும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். 

 

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் கூறவில்லை. ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசினேன். அந்த உரையாடலில், நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்டவற்றைக் குறித்து பேசினேன். 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் அளவிற்கு பாஜகவை வலுப்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கை மக்களிடத்தில் வளர்க்க வேண்டும். 

 

அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வாக்கியங்களைவிட தண்ணீரில் எழுதப்பட்ட வாக்கியங்கள் தான் அதிகம். தொகுதி பங்கீடு குறித்து முடிவான பிறகே கூட்டணி குறித்து முடிவாகும். காலை நான் பெங்களூருவிலிருந்து வந்தேன், அதேசமயம் நிர்மலா சீதாராமன் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அதேபோல், எஸ்.பி. வேலுமணி மதுரை செல்வதற்காக விமானநிலையம் வந்தார். அனைவரும் ஒரே நேரத்திற்கு அங்கு வந்ததால் மரியாதை நிமித்தமாக ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டோம். 

 

இன்றைய தேதிக்கு அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. கட்சி கூட்டத்தில் என் கருத்துக்களை நான் கூறினேன். அமித்ஷா கூட்டணியை உறுதி செய்தார் என்று சொல்ல முடியாது. கூட்டணியில் தான் இருக்கிறோம் என்றே சொல்லியிருக்கிறார். 

 

இன்னும் தேர்தலுக்கு ஒன்பது மாதங்கள் இருக்கின்றன. அதற்குள்ளாக முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது. தனிப்பட்ட முறையில் யார் மீதும் எனக்கு எந்த கோபமும் கிடையாது. அவரவர்கள் அவரவர் அரசியலை செய்கின்றனர். எங்கள் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும். அவர்கள் சொல்லும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். 

 

ஏப்ரல் 14ம் தேதி மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும். அதில், ஊழல் பட்டியல், வாட்ச் பில் உள்ளிட்ட அனைத்தும் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்