திமுக ‘பட்டி மாடல்’ என்ற ஒன்றை ஈரோடு கிழக்கு தேர்தலில் பயன்படுத்துவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பில் பலியான பொதுமக்களுக்கு தமிழக பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “திமுக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வந்தால் மக்களுக்கு 500 ரூபாயும் வேறு கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வரும் பொழுது அதற்கு போகாமல் இருந்தால் ரூ. 1000 ரூபாயும் கொடுக்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பட்டி பட்டியாக மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பட்டி என்பது அரவக்குறிச்சி மாடல், பணம் கொடுத்தல் என்பது திருமங்கலம் மாடல். இவை இரண்டையும் இணைத்து சிலர் இறங்கி இருக்கின்றனர். “பட்டி மாடல்” என்னும் பெயரில் காலையில் அழைத்து வந்து அடைத்து வைத்து விடுகின்றனர். பிரச்சாரத்திற்கு விடுவது இல்லை. இவை அனைத்தையும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒரு கடிதம் மூலம் எழுதி உள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளோம்.
அதேபோல், மாநிலத்தில் தேர்தல் ஆணையரிடம் பாஜக கொடுத்த புகாரில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கே.என்.நேரு, ஈவிகேஎஸ் இளங்கோவன் இருவரும் பேசியது குறித்து புகார் அளித்தோம். இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு எ.வ.வேலு மார்ஃப் செய்யப்பட்டது எனச் சொன்னார். அதற்கு நாங்கள் சவால் விட்டு இருந்தோம். தடயவியல் துறையினரிடம் அந்த ஆடியோவை கொடுக்கிறோம். அதை இல்லை என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகிவிடுவதாக சொல்லி இருந்தேன். இதுவரை பேச்சு மூச்சு இல்லை.
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஜனநாயகத்தை காப்பாற்றுகிறேன் என முதல்வர் பேசுகிறார். ஈரோடு கிழக்கில் நடப்பது ஜனநாயகப் படுகொலை. அனைத்து அமைச்சர்களும் அங்கு செல்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு அக்கறை ஈரோடு கிழக்கில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது. அதனால் தலைமை தேர்தல் அதிகாரி முறைப்படி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்” எனக் கூறினார்.