
பா.ம.க தலைவராக இனி அன்புமணி செயல்மாட்டார் என்றும், அவர் இனிமேல் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் பா.ம.க தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து பா.ம.கவின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸை தொடர்ந்து சந்தித்து சமாதானம் செய்யும் வேளையில் இறங்கியுள்ளனர். இருப்பினும் இந்த சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியிலேயே நீடிக்கிறது. அதே சமயம், பா.ம.க தலைவராக தொடர்ந்து நானே செயல்படுவேன் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் மே 11ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தை என்ற இடத்தில் பா.ம.க. சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான பணிகளை அக்கட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாமல்லபுரத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ராமதாஸின் வழிகாட்டுதல்படி சித்திரை முழுநிலவு மாநாடு நடக்கும். மனித வளர்ச்சி குறியீடுகளிள் மிகவும் பின்தங்கியிருக்கிறது. வடமாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனை அதிகளவில் நடந்து கொண்டிருக்கிறது. அதிகளவில் குடிசைகள் வடமாவட்டங்களில் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு சிறப்பு திட்டங்களை வழங்கி தமிழ்நாட்டை வளர்ச்சியடைய தமிழக அரசை வலியுறுத்துகின்ற வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. ராமதாஸின் கொள்கைக்கு இணங்க இந்த மாநாடு நடைபெறும். இதில் அனைவரும் கலந்துகொண்டு சமூக நீதியை நிலைநாட்டுவோம். தெலுங்கானா, பீகார், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்தி அதற்கேற்ப இட ஒதுக்கீட்டை உயர்த்தி இருக்கிறார்கள். இது தான் உண்மையான சமூக நீதி. அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உடனடியாக சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என இந்த மாநாட்டை நடத்துகின்றோம்.
இந்த மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களையும் ராமதாஸ் அழைத்திருக்கிறார். குறிப்பாக பட்டியல் இன சமுதாய மக்கள் அதிகளவில் வாருங்கள் என அழைத்திருக்கிறார். அனைத்து சமுதாய மக்களும் வளர்ச்சியடைய வேண்டும். அதனால் தான், ஆக்கப்பூர்வமான முறையில் இந்த மாநாடு நடைபெறும்” என்று கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இருக்கிறதே? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.