தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
சேர்மன், துணை சேர்மன், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி, சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவி, தேவகோட்டை, தேனி உள்ளிட்ட ஆறு நகராட்சி தலைவர் பதவி, கூடலூர், ஆரணி உள்ளிட்ட ஒன்பது நகராட்சி துணைத்தலைவர் பதவி, மங்கலம்பேட்டை, சின்னசேலம் உள்ளிட்ட எட்டு பேரூராட்சி தலைவர் பதவி, கன்னிவாடி, கணியூர் உள்ளிட்ட 11 பேரூராட்சி துணைத்தலைவர் பதவி ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல, மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவி, திருமுருகன்பூண்டி, கொல்லன்கோடு நகராட்சி தலைவர் பதவி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மூன்று நகராட்சி துணைத்தலைவர் பதவி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட மூன்று பேரூராட்சி தலைவர் பதவி, வடமதுரை உள்ளிட்ட 6 பேரூராட்சி துணைத்தலைவர் பதவி ஆகியவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல, திருப்பூரின் துணை மேயர் பதவியும், கூத்தாநல்லூரில் நகராட்சி தலைவர் பதவியும், பவானி, புளியங்குடி உள்ளிட்ட நான்கு இடங்களில் நகராட்சி துணைத்தலைவர் பதவியும், வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர் ஆகிய நான்கு இடங்களில் பேரூராட்சி தலைவர் பதவியும், கூத்தைப்பார், ஊத்துக்குளி உள்ளிட்ட ஆறு இடங்களில் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல, ஆவடி துணை மேயர் பதவி, மாங்காடு நகராட்சி தலைவர் பதவி, மூன்று நகராட்சி துணைத்தலைவர் பதவி, மூன்று பேரூராட்சி தலைவர் பதவி, மூன்று பேரூராட்சி துணைத்தலைவர் பதவி ஆகியவை மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், கடலூர் துணை மேயர் உட்பட இரண்டு நகராட்சி தலைவர் பதவி, மூன்று நகராட்சி துணைத்தலைவர் பதவி, மூன்று பேரூராட்சி தலைவர் பதவி, ஏழு பேரூராட்சி துணைத்தலைவர் பதவி ஆகியவை விசிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.