பரங்கிப்பேட்டை அருகே பி. முட்லூர் பகுதியில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து வியாழக்கிழமை மாலை அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .
அப்போது, பேசிய நடிகை விந்தியா, “சிதம்பரம் தொகுதி ஈசனே ஆட்சி செய்கிற, தில்லை காளியம்மன், கோவிந்தராஜ பெருமாள் காத்து நிக்கிற இடம். காடு, கடல், ஆறு உள்ள வலிமையான பூமி. இங்கே நிற்பது புண்ணியம், பேசுவதே பெருமை. இங்கு நியாயம் ஜெயிக்கணும், மக்கள் ஜெயிக்கணும், வெற்றி வேட்பாளர் சந்திரகாசன் ஜெயிக்கணும்.
நாட்டுக்காகவும் ,மக்களுக்காகவும் கட்சி ஆரம்பித்து பணியாற்றுபவர்கள் ஏராளம். ஆனால் 2 சீட்டுக்காக இன மக்களை உசுப்பேத்தி கோபப்பட வைத்து ஏமாத்தி இன மக்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார் திருமாவளவன். இவருக்கு எலக்சன் நேரத்துல கலெக்சன் ஆகுற ஓட்டு பத்தி தான் தெரியும். இன மக்களைப் பற்றி கவலை இல்லை.
எப்ப பார்த்தாலும் புத்தர், அம்பேத்கர் என பேசுவார். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும் என வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. வெள்ளாற்றில் தடுப்பணை கட்டுவதை அதிமுக அரசு அறிவித்ததை திமுக அரசு ரத்து செய்து விட்டது. திருமாவளவன் என்ன செய்தார். புத்தர் போல தவம் இருந்திருக்கலாம். அம்பேத்கர் மாதிரி புரட்சி செய்து இருக்கலாம். ஆனால் இவர் திமுகவிடம் அடிமையாக இருந்து வருகிறார்.
திருமாவளவன் செய்யறது ஒன்னு, சொல்றது ஒன்னு, கோவிலைப் பற்றி கேவலமா பேசுவாரு, தேர்தல் வந்தால் குனிந்து கும்பிடு போடுவார். காங்கிரஸ் தலைவர் பதவியை கொள்கைக்காக தூக்கி எறிந்த அம்பேத்கர் எங்கே? இனம் மானத்தை அடகு வைக்கும் திருமாவளவன் எங்கே?. தமிழகத்தில் தாமரை எப்படி மலரக் கூடாதோ, அது மாதிரி திமுக கூட்டணியும் வளரக்கூடாது. திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டு பேருமே நாட்டுக்காகவோ, மக்களுக்காகவோ அரசியலில் இல்லை. சுயநலத்திற்காகவும் அவர்கள் கூட்டணி வைத்துள்ளனர் கொள்கைக்காக இல்லை, கமலஹாசன் திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்தார்.
தற்பொழுது, ஸ்டாலின் மகன் உதயநிதியிடம் கைகட்டி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். வைகோ தமிழ்நாட்டு அரசியலில் சிறந்த சைக்கோ. திமுகவை உடைத்து மதிமுக என்ற கட்சியை உருவாக்கினார். அதே திமுகவிடம் ஒத்த சீட்டு கேட்டு கைகட்டி நிற்கிறார். வெட்கம் மானம் சூடு சொரணை இல்லை. அவர் சேக்ஸ்பியர் முதல் சிலப்பதிகாரம் வரை கரைத்துக் குடித்தவர். ஸ்டாலினிடம் அவர் கைகட்டி நிற்பது வருத்தமாக இருக்கிறது.
ஸ்டாலின் எவ்வாறு சாதி வெறி பிடித்தவர் என்று தெரியாதா? பெரம்பலூர் பொது தொகுதி என்பதால் ராசாவை நீலகிரிக்கு அனுப்பியவர். காங்கிரஸில் தலைமையும் இல்லை, தலைவர்களும் இல்லை. அதிமுக ஆட்சியின் போது மத சண்டை, சாதி சண்டை நடந்ததா? அமைதியாக இருந்தது. அதிமுக ஆட்சியில் மக்கள், மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்திவிட்டது.
எனவே தமிழகத்தில் மீண்டும் வளமான ஆட்சி அமைய அடித்தளம் விடும் வகையில் இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனுக்கு இரட்டை இலையில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்றார். சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன், அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.