தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணத்தின் போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அண்ணாமலை பேசும்போது, ‘காமராஜரின் மறுபிறப்பு மோடி’ எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இன்று உள்ள தற்கால தலைவர்கள் யாரையும் காமராஜர் உடன் ஒப்பிட்டு பேச முடியாது. காமராஜர் மிகப்பெரிய கர்மவீரர். நாள் முழுவதும் மக்கள் நலனையே நினைத்து கொண்டிருந்தவர். மக்களுக்காகவே வாழ்ந்தவர். மக்களுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.” என்றார். மேலும், “உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தெல்லாம் பேசி இருக்கிறார். பிரதமர் மோடி நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே தேர்தல் என்று கூறி வருகிறார். இவ்வாறு சொல்லக்கூடிய அக்கட்சி தலைவர்கள் மாநிலத்தின் சார்பில் முதலமைச்சர்கள் நடத்துகின்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கின்றபோது இந்த மாநிலத்தில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று சொல்லி இருந்தால் உண்மையில் அண்ணாமலை சொல்லி இருப்பதை பாராட்டி இருப்பேன்.
பிரதமர் மோடி குஜராத்திற்கு சென்று தொழில் முனைவோரை அழைத்து பேசினார். குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றது என்பது நாட்டின் பிரதமராக இருப்பவர் சிறிய வட்டத்திற்குள் இருக்கிறார். தமிழகக்தை பற்றி விமர்சனம் செய்வதற்கு அண்ணாமலைக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை” எனத் தெரிவித்தார்.