ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்க தமிழக அரசு இடைக்கால மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இடைக்கால மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆறு மாத கால இடைவெளியில் அதே சட்ட மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டு பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை 4 மாதம் கிடப்பில் வைத்திருந்த நிலையில் தமிழக அரசிடம் தற்போது திருப்பி அனுப்பி உள்ள நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால் ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது” என பேசி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச பொறுப்பு துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார்.
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், " இஎஸ்ஐ மருத்துவமனைக்கும் எனக்குமான பந்தம் கடந்த 35 ஆண்டு காலமாக உள்ளது. இந்த மருத்துவமனையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ சேவை புரிந்துள்ளேன். சுமார் 66 லட்சம் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனை சேவை புரிந்து கொண்டுள்ளது. படுக்கை வசதிகள், அவசர சிகிச்சை வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகள் என அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் இங்கு உள்ளன. நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு இந்திய முழுவதும் 9 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மருத்துவர்களுக்கு இதயம் இருப்பது போலத்தான் ஆளுநர்களுக்கும் இதயம் இருக்கிறது. ஆளுநர்களுக்கு வாய், காது இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது" என்று பேசினார்.