இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''அண்ணாமலை விரக்தியோடு பேசுவதற்கு காரணம் உட்கட்சிப் பிரச்சனை தான். அதிமுகவோடு கூட்டு சேர மாட்டேன் என்று அவர் சொல்கிறார். ஆனால் வானதி சீனிவாசனும், தமிழக பாஜகவினுடைய பார்வையாளர் முரளிதர ராவ் அதிமுகவுடன் கூட்டு என்கிறார்கள். இதைவிட அண்ணாமலைக்கு மனக்கசப்பு உருவாக்கும் விஷயம் என்னவாக இருக்க முடியும்.
ஒரு தேர்தல் அறிக்கை என்பது ஐந்து ஆண்டுகளுக்கானது. ஆட்சிக்கு வந்த உடனே எல்லாவற்றையும் அறிவிக்க முடியாது. மெல்ல மெல்ல கொஞ்சம் கொஞ்சமாகத் தான் செய்ய முடியும். பொறுத்திருங்கள். தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதுதான் நியதி. நீங்கள் எங்கே எங்கே என்று கேட்டால் எப்படி வரும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் வரும்.
அதிமுகவில் தனி மனிதர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். கொள்கை கிடையாது, லட்சியம் கிடையாது. மோடி 10 ஆண்டுகள் அவர்களை நசுக்கினார்கள். ஆனால் மோடிக்கு எதிராக அவர்கள் ஒரு பதில் கூட பேசத் தயாராக இல்லை. மாநிலத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டது. அதைக் கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. மண்டியிடுகிறார்கள், அச்சப்படுகிறார்கள். ஆனால் திமுக அரசு அப்படி இல்லை. மாநில உரிமைக்கு எதிராக செயல்பட்டால் உடனடியாக கேள்வி கேட்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள். பொதுவெளியில் போராடுகிறார்கள். மறுப்பு குரலை கொடுக்கிறார்கள். கண்டன குரல்கள் எழுப்புகிறார்கள். அதிமுகவிற்கு அதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் அதிமுக தனது செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறது'' என்றார்.