Skip to main content

 “அபிஜித் முகூர்த்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்துங்கள்” - விதாயகர்த்தா சிவ ஸ்வாமி சாஸ்திரி

Published on 07/05/2025 | Edited on 07/05/2025

 

 Kumbhabhishekam Subramanya Swamy Temple during Abhijit Muhurta time

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ள அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேத்துக்கான நேரத்தை பகல் 12.05 முதல் 12.47 வரை உள்ள அபிஜித் முகூர்த்த நேரத்தில் நடத்த வேண்டுமென திருக்கோயில் விதாயகர்த்தா சிவ ஸ்வாமி சாஸ்திரி தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கோயில் விதாயகர்த்தா சிவ ஸ்வாமி சாஸ்திரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாரம்பரியமாக நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் சாஸ்திர ரீதியிலான நிகழ்ச்சிகளை, தலைமுறை தலைமுறையாக நாங்கள் தான் நாள் பார்த்து முகூர்த்தம் குறித்து கொடுத்து வருகிறோம்.  கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, அப்போதைய இணை ஆணையர் கேட்டுக் கொண்டதன் பேரில் இக்கோயிலில் நடைபெற உள்ள மஹா கும்பாபிஷேகத்துக்கு  விசுவாவசு வருடம் ஆனி மாதம் 23 ஆம் தேதி (7-7-2025)  காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு முகூர்த்தமும், அப்புறம் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை ஒரு முகூர்த்தமும் என இரண்டு முகூர்த்த நேரங்கள் பஞ்சாங்கம் வருவதற்கு முன்பு தோராயமாக குறித்துக் கொடுத்தோம். அப்போது இந்த வருடத்திற்கான வாக்கிய பஞ்சாங்கம் வெளியாகவில்லை. தற்போது வாக்கிய பஞ்சாங்கம் வெளியாகி உள்ளது. அதன்படி பார்க்கையில் அதே ஜூலை 7ஆம் தேதி ஏற்கனவே குறிக்கப்பட்ட  முகூர்த்த நேரங்களை விட அபிஜித் முகூர்த்தம் சரியாக இருக்கும் என்பதால் பகல் 12.05 மணி முதல் 12 .47 மணிக்குள்  கும்பாபிஷேகம் நடத்துவது சிறப்பாக இருக்கும் என ஸ்தலத்தார் சபை மற்றும் கைங்கர்ய சபை நிர்வாகிகளுடன் கலந்து பேசி கோவில் அலுவலகத்தில் முறையாக அண்மையில் தபால் கொடுத்திருந்தோம்.

அதனடிப்படையில் வந்த அழைப்பின் பேரில் இணை ஆணையர் மற்றும் ஆணையர் அலுவலகத்திற்கு பேச சென்றோம். அங்கு அதிகாரிகளுடன் நாங்கள் எல்லோரும் கலந்து பேசுகையில், ஜூலை மாதம் 7 ஆம் தேதி திங்கள்கிழமையன்று  சுக்ல பஷ்ச துவாதசி அனுஷம் நட்சத்திரத்தில் சித்த யோகம் பரிபூரண ஜீவ நேத்ர பலன் உள்ள காலத்தில்  அபிஜித் முகூர்த்தமான 12.05 முதல் 12. 47 வரை உள்ள நேரத்தில் கும்பாபிஷேகம் செய்தால் ரொம்ப விசேஷம். நாட்டுக்கும், நாட்டை ஆளும்  ஆட்சியாளர்களுக்கும், பக்தர்களுக்கும் பொது ஜனங்களுக்கும் நல்லது நடக்கும் என்பதை விளக்கி கூறினோம். ஆனால் அங்கிருந்த அறநிலையத்துறை அதிகாரிகள் கும்பாபிஷேக நேரத்தை காலை 9 மணி முதல் 10:30 மணி என வாசித்தனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து விட்டு வந்து விட்டோம். நாங்கள் குறிப்பிட்ட அபிஜித் முகூர்த்தம் என்பது நிழல் விழாத முகூர்த்த நேரம் ஆகும். அந்த முகூர்த்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்தினால் நாட்டுக்கும், ஆட்சியாளர்களுக்கும், நீதி பரிபாலனம் நிர்வாக பரிபாலனம் செய்பவர்களுக்கும், கிராமங்களுக்கும் நன்மை நடக்கும். வேறு எந்த குறைகள் தோஷங்கள் இருந்தாலும் நீங்கிடும். திருச்செந்தூர் கோயில் மற்ற கோவில்களைப் போல் அல்லாமல்  சைவாதீன கோயில்களை போல் எடுத்துக் கொள்ளாமல், இங்கு குமார தந்திர படியும், தாந்திரீக முறைப்படி தந்திர சமிக்ஞை நடத்துவதால் கும்பாபிஷேகத்துக்கு அபிஜித் முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது.

12 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்தலாமா என சிலர் விவாதித்தனர்.  ஆனால் கடந்த 1909 ஆம் ஆண்டு இக்கோயிலில் மூலவர் பிரதிஷ்டை நண்பகல் 12 மணிக்கு மேல் தான் ரிஷப லக்கத்தில் நடந்துள்ளது என கல்வெட்டு ஆதாரத்துடன் சொல்லி உள்ளோம். ராமேஸ்வரம் கோயிலிலும் 12 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். எனவே அனைவரின் நலன் கருதி  2025ம் ஆண்டு  ஜூலை மாதம் 7 தேதி அபிஜித் முகூர்த்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த தக்க ஆவண செய்து அறிவிக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்” என்றார்.

பேட்டியின் போது திரிசுதந்திர ஸ்தலத்தார் சபை தலைவர் வீரபாகு மூர்த்தி ஐயர், செயலாளர் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் தேவராஜன் ஆனந்த், கைங்கர்ய சபா தலைவர் ஆனந்த், செயலாளர் கட்டியம் ராஜன், துணைத் தலைவர் ஆகாஷ், நிர்வாகிகள் சங்கர சுப்பு சாஸ்திரிகள், ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

சார்ந்த செய்திகள்