அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன். இவர் திமுக கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தலின் போது ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அப்போது அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த ராஜகண்ணப்பன், மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் திமுகவுக்கு அவர் ஆதரவு தெரிவித்து இருந்தார். தற்போது தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முறையாக செய்யவில்லை என்று திமுக தரப்பு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் சந்தித்து பேசியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக ராஜ.கண்ணப்பன் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளிவருகிறது. சமீபத்தில் அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு எந்த பொறுப்பும் கொடுக்காமல் இருப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பவர்கள் கட்சி மாறும் மனநிலைக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர்.