ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்; அதற்கேற்ப புதிய தேர்தல் தேதி அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பான குளறுபடிகளுக்கு எதிராக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில், தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதற்காக அதிமுக கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்களுடனும், அதிமுக மா.செ.க்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடனும் 06.12.2019 வெள்ளிக்கிழமை மாலை தனித்தனியாக அவசர ஆலோசனையை நடத்தியது அதிமுக தலைமை.
கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனையைத் தொடர்ந்து அதிமுகவின் மா.செ.க்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது அதிமுக தலைமை. அந்த ஆலோசனையில், தேர்தலை இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிப்போடுங்கள் எனவும், தேர்தலை உடனடியாக நடத்தலாம் எனவும் இரு வேறு குரல்கள் அங்கு எதிரொலித்திருக்கின்றன. குறிப்பாக, உள் கட்சிக்குள்ளே உள்குத்து நிறைய இருப்பதால் அது கட்சியின் வெற்றியை பாதிப்பதுடன், திமுகவுக்கு அது சாதகமாகும் என்கிற காரணத்தையும் விவரித்துள்ளனர்.
இதற்கு பதில் சொன்ன அதிமுக தலைவர்கள், எது எப்படி இருப்பினும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருங்கள். கூட்டணி கட்சிகளோடு நடத்தப்படும் ஆலோசனையில் எந்த காரணங்களுக்காகவும் அதிக இடங்களை விட்டுக்கொடுக்க கூடாது. ஒரு ஊராட்சியில் 10 வார்டுகள் இருந்தால் அதில் அதிகபட்சம் 8 வார்டுகளில் நமது ஆட்கள் போட்டியிட வேண்டும். கூட்டணி கட்சிகள் நான்கும் சீட்டுகளை கேட்டு வலியுறுத்தினால் 2 கட்சிகளுக்கு சீட் ஒதுக்கி விட்டு, சீட் ஒதுக்கப்படாத மற்ற 2 கட்சிளுக்கும் பக்கத்து ஊராட்சியில் ஒதுக்குவதாகச் சொல்லி சமாதானப்படுத்துங்கள். இதில் முடியாத பட்சத்தில்தான் 8 சீட்டுகளை நீங்கள் குறைத்துக்கொள்ள முன் வரவேண்டும். மற்றபடி சட்டென்று சமரசம் செய்துகொள்ளக்கூடாது என சீட் சேரிங் எப்படி இருக்க வேண்டும் என்று ஏகத்துக்கும் அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.