நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளை திமுக கைப்பற்றியது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் பலர், ஜெயலலிதா இருந்திருந்தால் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து தோல்வி குறித்து விசாரிப்பார். அனால் எடப்பாடி பழனிசாமியோ, அமைச்சர்களையும் எம்எல்ஏக்களையும் அழைத்து விசாரிக்கிறார். இவர்கள் தாங்கள் சொன்னவரைத்தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தனர். தேர்லின்போதும் இவர்கள் கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தோல்விக்கான உண்மையான காரணத்தை சொல்லப்போவதில்லை.
அப்படி சொன்னால் அவர்களே சிக்கிக்கொள்வார்கள். எங்களையும் அணுகவிடுவதில்லை. எடப்பாடி பழனிசாமியும் எங்களை சந்திக்க விரும்பவில்லை. ஏனெனில் ஆட்சியை தக்க வைக்க அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தேவை என்பதால் அவர்களிடம் கோபத்தை காட்டாமல் உள்ளார். கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச மறுத்தால் அது எப்போது வேண்டுமானாலும் பெரிய பிரச்சனையாக வெடிக்கும். அந்த நிலை வராமல் இருக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகளை அழைத்துப் பேசி கட்சியைக் காப்பாற்ற சுதாரித்துக்கொண்டால் நல்லது என்கின்றனர்.