Skip to main content

அ.தி.மு.க. VS பா.ஜ.க.! உச்சக்கட்ட வார்த்தைப் போரில் தலைவர்கள்! 

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

- தெ.சு.கவுதமன்

 

A.D.M.K. VS BJP! Leaders in the ultimate war of words!

 

பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் நிர்மல் குமார் அங்கிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததிலிருந்தே தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க.வில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சியளித்து வருகிறார்கள். மற்றொருபுறம், பா.ஜ.க.வினர் சிலர் எடப்பாடி பழனிசாமியின் கொடும்பாவியை எரித்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, மிகவும் காட்டமாக அ.தி.மு.க.வை விமர்சித்தார். தன்னை ஜெயலலிதா, கலைஞரோடு ஒப்பிட்டுக் கொண்டார். இதற்கு அப்போதே அ.தி.மு.க. தரப்பிலிருந்து கடும் எதிர்வினை வந்தது. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தார். 

 

அண்ணாமலை அதன் பின்னரும் தொடர்ச்சியாக ஜெயலலிதா குறித்து பேசுகையில், தன்னுடைய தாயார் ஜெயலலிதாவைவிட 100 மடங்கு பவர்ஃபுல் என்றும், தனது மனைவி ஜெயலலிதாவைவிட 1000 மடங்கு பவர்ஃபுல் என்றும் பேசியது அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்வினையாற்றிய மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு, "பா.ஜ.க.விற்கு சகிப்புத்தன்மையே இல்லையெனத் தெரிகிறது. அந்த கட்சி தமிழ்நாட்டில் ஏன் வளரவில்லை என்பதற்கு இதுதான்  காரணம். திராவிட இயக்கங்கள் போல வளரணும் என்றால் அது முடியாது. அந்த இயக்கத்திற்கு அதற்கான தகுதியும் கிடையாது. அண்ணாமலை வாய்க்கொழுப்போடு பேசுவதாகத் தெரிகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தான் காரணம். ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு தகுதியே கிடையாது. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. ஜெயலலிதாவைப்போல் யாரும் பிறக்கவும் இல்லை. இனி பிறக்கவும் முடியாது." என்று கடுமையாக பதிலடி தந்திருந்தார். 

 

இவரது பேச்சுக்கு எதிர்வினையாக, தமிழக பா.ஜ.க. நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில், செல்லூர் ராஜு அணைக்கட்டில் தெர்மாகோல் விட்ட புகைப்படத்தைப் பதிவிட்டு, "வாய்க்கொழுப்பின்றி பேசுவது; திமிரின்றி நடந்து கொள்வது என்பது குறித்தெல்லாம் வகுப்பெடுக்க மதுரையில் விரைவில் கல்லூரி துவங்கப் போறாராம் செல்லூர் ராஜு. நெருங்கிய நட்பில் இருக்கும் யாராவது அங்க ஒரு ‘சீட்’ வாங்கிக் கொடுங்கப்பா! இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.,வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது." என்று கிண்டலடித்துள்ளார். 

 

இதற்கிடையே, தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடுவேன் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். இது குறித்தும், அ.தி.மு.க. குறித்தும் அண்ணாமலை விமர்சித்தது குறித்தும் பா.ஜ.க.விலிருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம், பல்வேறு கேள்விகளை அண்ணாமலை நோக்கி எழுப்பியுள்ளார். அதில், "மாநிலத் தலைவர் ஆன பிறகு அண்ணாமலை மூலம் எத்தனை யூடியூப் சேனல்களுக்கு நிதியளிக்கப்படுகின்றன? எத்தனை ஊடகங்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது? மாநிலத் தலைவர் ஆன பிறகு சமீப காலத்தில் எத்தனை நிறுவனங்கள் அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டுள்ளன? அவரது வருமானம் என்ன? ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு 4 ஆடுகளை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வளவு பேருக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்?" என்றும், "அண்ணாமலை ஊழல் செய்யாதவராக இருந்தால் தமிழக பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக ஆனதிலிருந்து அவர் தனது சொந்த டிரஸ்ட்டில் செய்யப்பட்ட டெபாசிட்கள், பரிவர்த்தனைகளை வெளிப்படையாக ஊடகங்கள் மூலம் தமிழகத்திற்கு காட்டுவார்? வாட்ச் பில் உடன்... அவர் இந்த சவாலுக்கு ஒப்புக்கொள்கிறாரா? ஊழல், கமிஷன், வசூல் என்பது இங்கு பெரும் கேள்வியாகி வருகிறது" என்று அதிரடியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். 

 

இதுவரை தி.மு.க.வை மட்டுமே பகைத்து வந்த பா.ஜ.க. அண்ணாமலை தற்போது ஜெயலலிதாவுடன் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஒப்பிட்டு மட்டம் தட்டியதால் அவருக்கு பலரும் பதிலடிகளைத் தந்து வருகிறார்கள். இந்த சண்டை எங்கே சென்று முடியுமோ என்று கட்சித் தொண்டர்கள் பரபரப்புடன் கவனித்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்