கரோனா நிவாரணத்துக்காக நிதி திரட்டும் முயற்சியிலும் எடப்பாடி அரசு இறங்கியிருக்கிறது. எந்த ஒரு பேரிடர் நேரத்திலும் நிவாரண நிதி திரட்டுவது வழக்கம்தான். இதில் முதல் நபராக, தனது சொந்தப் பணத்திலிருந்து 25 லட்சம் ரூபாயைக் கொடுத்திருக்கிறார், அண்மையில் ராஜ்யசபா உறுப்பினராகியிருக்கும் கே.பி. முனுசாமி. இதேபோல் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினும், தி.மு.க, எம்.எல்.ஏ.க்கள் 96 பேரும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்று அறிவித்தார். பா.ம.க. எம்.பி. அன்புமணி தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3 கோடி ரூபாயை முதற்கட்டமாக ஒதுக்குவதாகச் சொல்லியிருந்தார்.
இதேபோல் அ.தி.மு.க எம்.பி.க்களான தேனி ரவீந்திரநாத் கன்னியாகுமரி விஜயகுமார் ஆகியோர் உடனடியாக 1 கோடி ஒதுக்கினர், . ம.தி.மு.க எம்.பி. கணேசமூர்த்தியும் 1 கோடி, வழங்கியிருக்கிறார். இதற்கிடையே அ.தி.மு.க எம்.பி.க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 1 கோடி ரூபாயும், எம்.எல்.ஏ..க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 25 லட்சமும் ஒதுக்குவார்கள் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தும் தனது 1 மாத சம்பளமான 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட கொடைக்கரங்கள் நீள்வது நிதி நெருக்கடிக்கு ஆறுதலைத் தரும் என்கின்றனர்.