தி.மு.க. தலைமை செயல்படுத்தும் கரோனா கால நிவாரணச் செயல் திட்டமான 'ஒருங்கிணைவோம் வா' மூலமாக தமிழக மக்களுக்கு கிடைக்கும் உதவிகள் குறித்து ஆளுந்தரப்புக்கு பலவிதமான ரிப்போர்ட் சென்று கொண்டிருந்தாலும், ஆளுங்கட்சியினர் அதன் தாக்கத்தை உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது வைரலாகப் பரவிய அந்த ஆடியோ.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் செல்லாது எனத் தேர்தல் ஆணையத்திலும், டெல்லி உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்ததுடன், அ.தி.மு.க.வில் இருந்து தன்னை நீக்க இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.க்கு அதிகாரம் இல்லை என அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கே.சி.பி.க்கு அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்புகளில் பரவுகிறது. அதில்,
கே.சி.பி. : கரோனா எப்படி இருக்கு உங்க பகுதியில?
அ.தி.மு.க. நிர்வாகி : கரோனா நம்ம மண்டலம் சிவப்பு மண்டலம்தான். விருதுநகர் சிவப்பு மண்டலமாக்கிட்டாங்க.
கே.சி.பி. : எப்படி, கவர்மெண்ட் செய்யறது மக்களுக்கு திருப்தியா இருக்குதா? சங்கடப் படுறாங்களா?
அ.தி.மு.க. நிர்வாகி : நமக்குள்ள பேசிக்குவோம்... கண்டிப்பா சங்கடப்படுறாங்க.
கே.சி.பி. : ரொம்ப கஷ்டப்படுறாங்க.
அ.தி.மு.க. நிர்வாகி : சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்குறாங்க. தி.மு.க. கட்சிக்காரங்க வீடு வீடா கொடுக்கிறத பாத்து, 'நீங்கதான் ஆளுங்கட்சி, அவன் தேடி வந்து கொடுக்குறான். நீங்க என்ன பண்ணீங்கன்னு' நம்ம மக்கள் நம்மள பாத்து கேட்குறாங்க. உட்கிராமத்துலக் கூட கொடுக்குறாங்க அண்ணா.
கே.சி.பி : ஆமா... ஆமா... அவன் பின்னி எடுக்குறான்.
அ.தி.மு.க. நிர்வாகி : நான் கூட ஒரு பையனுக்கு அந்த ஆப்பை அப்ளை பண்ண சொல்லி, அட்ரஸ அனுப்புன்னு சொன்னேன். உடனே ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஒரு ஜீப்புல வந்து "தளபதி அலுவலகத்திற்கு சொன்னீங்களாமேன்னு' சொல்லி அந்த பையனுக்கு உதவிட்டு போயிருக்காங்க. அந்த பையன் சொன்னான்.
கே.சி.பி. : 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் மக்கள் கஷ்டப்படுறாங்க. சாப்பாட்டுக்கு கஷ்டப் படுறாங்க.
அ.தி.மு.க. நிர்வாகி : நாம சரியா பண்ணல அண்ணா.
கே.சி.பி. : இவுங்க நிறைய கொள்ளையடிச்சி வைச்சிருக்காங்க கொடுக்கலாம். எலெக்ஷன் நேரத்துல ஓட்டுக்கு 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரங்குறானுங்க. இப்ப இறக்க வேண்டியதுதானே நல்லா.
அ.தி.மு.க. நிர்வாகி : ஆனா இவுங்க (தி.மு.க.) நீங்க ஓட்டுப்போடுங்க, ஓட்டுப் போடாம போங்க, எங்க கடமை நாங்க செஞ்சுடுறோமுன்னு கிராமத்துல சாதாரண வார்டு மெம்பர் கூட வீடு வீடா கொடுத்துட்டு போறான்.
கே.சி.பி. : ஆமா... ஆமா... அவுங்க புல் தெம்புல இருக்காங்க. ஆட்சிக்கு வந்துருவோமுன்னு... ரெண்டு விஷயம் தெளிவா போகுது. தி.மு.க.காரன் ஆட்சிக்கு வந்துருவோங்கிற தெம்புல இருக்குறான். இவுங்க இன்னும் ஒரு வருஷம் இருக்கு... அதுக்குள்ள எவ்வளவு பணம் பண்ண முடியுமோ, பண்ணுவோமுன்னு இருக்காங்க.
அ.தி.மு.க. நிர்வாகி : ஆனா வரமாட்டோம் என தெரிஞ்சுதான் பண்றாங்க இவுங்க. எப்படி அண்ணா? நாளைக்கு வரமாட்டோமுன்னு தெரிஞ்சு பண்றாங்க. நாளைக்கு ராஜேந்திரபாலாஜி சொல்ற மாதிரி டாடி ரெய்டு விட்டு புடுங்கிட்டாருன்னா?
கே.சி.பி. : அதெல்லாம் அதுக்கு ஒரு ரேட்டை பிக்ஸ் பண்ணி கொடுத்து சரி பண்ணிக்குவாங்க. கால்ல விழுவதுக்கோ, கால வார்றதுக்கோ தயக்கம் கிடையாது. பேசிக்காக ஒரு பிரின்ஸ்புல் இருக்கணும். இதுதான் கொள்கைன்னு கிடையாதுல்ல.
அ.தி.மு.க. நிர்வாகி : கண்டிப்பா... கண்டிப்பா... ஆமா...
கே.சி.பி. : முடிஞ்ச வரைக்கும் சுருட்டுறது. மாட்னா கைய, கால புடுச்சி தப்பிச்சுக்கலாங்கிறதுதான் இவுங்களோடது.
இவ்வாறு செல்கிறது அந்த ஆடியோ.
இதுதொடர்பாக கே.சி.பழனிசாமி நம்மிடம், "மக்கள் 100, 200 ரூபாய்க்கு கஷ்டப்படுறாங்க. எலெக்ஷன் நேரத்துல இரண்டு கட்சிக்காரங்களும் 3 ஆயிரம், 2 ஆயிரமுன்னு கொடுக்குறத, இந்த நேரத்துல கொடுத்தால் மக்களோட கஷ்டம் தீருமேன்னு சொன்னேன். அந்த ஆடியோவில் நான் பேசியது குறைச்சலா இருக்கு. அவர் பேசியது அதிகமா இருக்கு. கே.சி.பழனிசாமி அண்ணா வணக்கம் என பேச்சைத் தொடங்குகிறார். அதனாலத்தான் என்னைத் தொடர்பு கொண்டவர் அ.தி.மு.க. காரரா எனச் சந்தேகமாக இருக்கிறது.
தினந்தோறும் நிறைய பேர் பேசுறாங்க. கருத்து கேட்கிறோம். பகிர்ந்து கொள்கிறோம். தி.மு.க.வைவிட அ.தி.மு.க. சிறப்பாகச் செயல்படணும் என்ற எதிர் பார்ப்புலதான் சொல்றோம். அடுத்த வீட்டு பையன் நல்லா படிக்கிறான்னு சொல்றோம். எதுக்காக? அவனை விட நம்ம வீட்டுப் பையன் நல்லா படிக்கணும் என்ற நல்லெண்ணத்தில் சொல்றோம். நான் என்றைக்கும் அ.தி.மு.க.காரன்தான்'' என்றார் அழுத்தமாக.