Published on 23/08/2019 | Edited on 23/08/2019
அதிமுகவில் காலியாக இருக்கும் இரண்டு அமைச்சர் பதவிக்கு எம்.எல்.ஏ.க்கள் அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மணிகண்டன் திடீரென்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்த துறையை அமைச்சர் உதயகுமாரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. ஏற்கனவே இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி சிறைக்கு சென்றுவிட்டதால் அவரது துறையை கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் கொடுக்கப்பட்டது. தற்போது இரண்டு அமைச்சர்களுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்ட துறையை கைப்பற்ற அதிமுகவில் இருக்கும் சில எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமையை அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 'சி' குறுவட்ட தடகள விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. போட்டியை மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா துவக்கி வைத்தார். அதன் பின்பு பேசிய ராஜன் செல்லப்பா, விளையாட்டு துறைக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுத்து தனி அமைச்சகத்தை ஏற்படுத்தினார். விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 2 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 சதவீதமாக உயர்த்தியுள்ளார். விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களுக்கு அரசு வேலை நிச்சயம் கிடைக்கும். மேலும் அமைச்சர்களை நீக்க முதல்வருக்கு அதிகாரம் உள்ளது. நிர்வாகரீதியாக அவர் அமைச்சர்களை மாற்றலாம். புதிய அமைச்சர்களை அவர் நியமிக்க வேண்டும் ன்றும் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பாக, அ.தி.மு.க வில் ஒற்றை தலைமை வேண்டும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்திய ராஜன் செல்லப்பா தற்போது அமைச்சரவையை மாற்ற வேண்டும் என்றும் கூறியது அதிமுகவில் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.