Published on 12/08/2019 | Edited on 12/08/2019
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற்றார். இதன் பின்பு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் சேர்ந்து கூட்டாக அறிக்கை ஒன்று வெளியிட்டனர். அந்த அறிக்கையில், வேலூரில் அதிமுக தனது வாக்கு வங்கியை நிரூபித்துள்ளது. இது அதிமுகவிற்கு தோல்வியே கிடையாது என்று தெரிவித்தனர். இந்த நிலையில் அதிமுகவில் காலியாக இருக்கும் இரண்டு அமைச்சர் பதவிக்கு எம்.எல்.ஏ.க்கள் அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது கடந்த வாரத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மணிகண்டன் திடீரென்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவர் வகித்த துறையை அமைச்சர் உதயகுமாரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. ஏற்கனவே இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி சிறைக்கு சென்றுவிட்டதால் அவரது துறையை கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் கொடுக்கப்பட்டது. தற்போது இரண்டு அமைச்சர்களுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்ட துறையை கைப்பற்ற அதிமுகவில் இருக்கும் சில எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமையை அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் எடப்பாடி தனக்கு விசுவாசமாக இருக்க கூடியவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அதிமுகவில் மீண்டும் கோஷ்டி பூசல் அதிமாக உருவெடுத்துள்ளதாக கூறுகின்றனர்.