தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளை திமுக கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்க உள்ளார்.
இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். மேலும், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (03/05/2021) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அ.தி.மு.க. தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றுவதற்கும், கட்சியைக் கட்டிக் காக்கவும் உடன்பிறப்புகள் உறுதி ஏற்க வேண்டும். நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதிசெய்யும் அச்சாணியாகவும் செயல்பட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தமிழக சட்டமன்றத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி என்னும் பெரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.