திருவண்ணாமலை மாவட்டத்தை கட்சி நிர்வாக ரீதியாக வடக்கு, தெற்கு என பிரித்து வைத்து நிர்வாகிகளை நியமித்து கட்சி பணி பணிகளை செய்து வருகிறது அதிமுக. வடக்கு மாவட்ட செயலாளராக மோகன், தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு செயலாற்றி வந்தனர்.
தெற்கு மாவட்டம் செயலாளராக வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சேவூர் ராமச்சந்திரன் நியமிப்பதற்கு கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது ஆரணி தொகுதியை தெற்கு மாவட்டத்தோடும், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியை வடக்கு மாவட்டத்தோடு இணைத்து இது நிர்வாக ரீதியாக சரியாக இருக்கும் என காரணம் கூறி விவகாரத்தை முடித்து வைத்தனர். கடந்த இரண்டு வருடமாக இவர்கள் இதே நிலையில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் அதிமுகவில் மிகப்பெரிய அளவில் நிர்வாகிகள் மாற்றமும், மாவட்டங்கள் பிரிப்பும் நடைபெற்றுள்ளது. இந்த அடிப்படையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் மோகன், தெற்கு மாவட்ட செயலாளராக பால் கூட்டுறவு சங்க மாவட்ட சேர்மன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார் இது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வடக்கு மாவட்டத்திற்கு 4 சட்டமன்ற தொகுதிகளும், தெற்கு மாவட்டத்திற்கு 4 சட்டமன்ற தொகுதிகள் தருவதுபோல் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் தெற்கு மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூர் ஆகிய 4 தொகுதிகளும் வடக்கு மாவட்டத்தில் செய்யார், வந்தவாசி, ஆரணி, கலசப்பாக்கம் என நான்கு தொகுதிகளை பிரித்து வைத்துள்ளனர். இதில், தெற்கு மாவட்டத்தில் கலசபாக்கம் தொகுதி வந்திருக்கவேண்டும் ஆனால் அதற்கு பதில் போளூரை இதோடு இணைத்து வைத்துள்ளனர்.
இதுபற்றி அதிமுக பிரமுகர் ஒருவர் நம்மிடம், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் திமுகவும், மூன்று தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. செய்யார் மோகன், ஆரணி சேவூர் ராமச்சந்திரன், கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றனர். இதில், கலசபாக்கம் தொகுதி என்பது தற்போது மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ச்சியாக நின்று வெற்றி பெறும் தொகுதி. அந்த தொகுதியில் அவருடைய சமூகத்தினர், உறவினர்கள் என அதிகமாக உள்ளனர். அவர் அந்த தொகுதியில் அதுமட்டுமல்லாமல், கலசபாக்கம் ஒன்றிய சேர்மனாகவும் இருந்துள்ளார். கலசப்பாக்கத்தில்தான் அவருக்கு ஆதரவாளர்களும் அதிகம். ஆனால் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி, அமைச்சரின் லஞ்ச டார்ச்சரால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அமைச்சர் பதவியை இழந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தார். அப்படிப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் தேர்தலில் சீட் வழங்கக்கூடாது என கலசப்பாக்கம் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு பதிலாக, பன்னீர்செல்வத்திற்கு சீட் வழங்கினார், அவரும் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். அவர் எம்.எல்.ஏ. ஆனது அக்ரி கிருஷ்ணமூர்த்தியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் இரு தரப்பும் கலசபாக்கம் தொகுதிக்குள் எதிரும் புதிருமாகவே மோதிக்கொண்டுள்ளன.
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு முதல்வரான எடப்பாடி பழனிசாமி மூலம் மீண்டும் வந்தார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. கொங்கு அமைச்சர்களின் நட்பினால் அக்ரிக்கு முக்கியத்துவம் கிடைத்தன. அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் கட்சியில் வாய்ப்பு வழங்கினால், நான் அதிரடியாக வேறு முடிவுகளை எடுப்பேன் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கலசபாக்கம் எம்.எல்.ஏ.வாக உள்ள பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிரட்டினார். பின்னர் சில பல பேச்சுவார்த்தைகளும் சில சமாதான படங்களும் நடந்து, கவனிப்புகள் செய்தபின்பு பன்னீர்செல்வம் தன்னுடைய எதிர்ப்பின் அளவை குறைத்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் கட்சிக்குள் தன்னுடைய அதிகாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக படிப்படியாக தன்னுடைய நண்பர்களான, அமைச்சர்களாக உள்ளவர்களையும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் போன்றோருடனும் லாபி செய்து கொண்டிருந்தார். அதன் அடிப்படையிலேயே திருவண்ணாமலை வேலூர் பால் கூட்டுறவு ஒன்றியத்தை இரண்டாக பிரித்து திருவண்ணாமலை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியம் என்று ஒன்றை உருவாக்கி அதன் சேர்மன் பதவியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உட்கார வைக்கப்பட்டார்.
இந்நிலையில் மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவதை அறிந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது மேல்மட்ட லாபி மூலம் மாவட்ட செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என காய் நகர்த்தினார். அவர் எதிர்பார்த்தபடியே தெற்கு மாவட்ட செயலாளர் பதவி அவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதனை கலசபாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின் மீண்டும் சில சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தெற்கு மாவட்டத்தில் இருக்க வேண்டிய கலசபாக்கத்தை வடக்கு மாவட்டத்திற்கும், வடக்கு மாவட்டத்தில் இருக்க வேண்டிய போளுரை தெற்கு மாவட்டத்திலும் இணைத்து பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்துவிட்டு அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தெற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கட்சிக்குள் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது என ஓரம் கட்டி வைத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவர் வழியில் ஆட்சி செய்வதாக சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் பதவியை வழங்கி இருப்பது எங்களை போன்ற நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என புலம்புகின்றனர் நிர்வாகிகள்.