Skip to main content

“கரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்றிடத் தீவிரப் பணியாற்றிட வேண்டும்” - மு.க.ஸ்டாலின் 

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

"Work hard to save people from the second wave" - MK Stalin

 

தமிழகத்தில் கரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், கரோனா தொற்றில் மக்களுக்கு சேவை செய்யுமாறு திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தொற்றின் முதலாவது அலையின்போது, “ஒன்றிணைவோம் வா” என்ற மாபெரும் மக்கள் இயக்கம் மூலம் மனித நேயப் பணிகளை ஆற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - இரண்டாவது அலை துவங்கியவுடனும் கழகத்தினர் அனைவரும் பணியாற்றிட வேண்டும் என ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பேரில் - மாநிலம் முழுவதும் கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதை நானறிவேன். 

 

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டோர் தேர்தல் நடத்தை விதி முறைகள் காரணமாக இப்பணியில் ஈடுபட முடியாத நிலை இருந்தது. ஆகவே, கழக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அமைப்புச் செயலாளர் திரு. ஆலந்தூர் பாரதி அவர்கள் மூலம் தேர்தல் ஆணையத்திடம் இதற்குக் கழகத்தின் சார்பில் அனுமதி கோரப்பட்டது.

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று - கரோனா தடுப்புப் பணியின் ஓர் அங்கமாக கபசுரக் குடிநீர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட ஆட்சேபணை இல்லையெனத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருப்பதால் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் – வேட்பாளர்களாக இருக்கும் மாவட்டச் செயலாளர்களும் கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு - கரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்றிடத் தீவிரப் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

அவ்வாறு கபசுரக் குடிநீர் வழங்கும் போது, அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்களைச் சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்குக் கழக வேட்பாளர்கள் அனைவரும் உரிய வகையில் தெரிவித்து, அரசு அறிவுறுத்தியுள்ள தனிமனித இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடித்து - பொது மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்