
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப். 13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி துவங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு துவங்கியதும், மறைந்த தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு கூட்டத்தொடர் துவங்கியது. ஆளுங்கட்சி எம்.பி.க்கள், ராகுல் காந்தி வெளிநாட்டிற்குச் சென்று நாடாளுமன்றப் பிரச்சனைகளைக் குறித்து விவாதித்தது தவறு என்றனர். அதேபோல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்தனர். இதனால், நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது மீண்டும் பாஜகவினர், இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அதேபோல், எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பின. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மறுநாள் வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதேபோல் நேற்றும் அவை தொடங்கிய 11 மணியில் இருந்து, அதானி ராகுல் விவகாரங்களால் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி கூச்சலை எழுப்பியதால் மக்களவை பிற்பகல் 2 மணை வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவெளிக்கு பின் கூடிய அவையில் மீண்டும் கூச்சல் ஏற்பட்டதால் இன்று காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு கூடிய அவையில் அதானி ராகுல் விவகாரத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பினர். இதனால் இன்றும் அவை முடங்கியது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் எங்களுக்கு நீதி வேண்டும் என்ற கோஷங்களையும் பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிர்ப்பு குரலும் கொடுத்ததால் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டன. இதனால் மக்களவையின் சபாநாயகர் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார். மாநிலங்களவையிலும் தொடர் கூச்சல் குழப்பங்களால் மாநிலங்களவையும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அதானி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மத்திய அரசுக்கு உதவியாக விசாரணை அமைப்புகள் செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தி வருகின்றன. மேலும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் இருந்து பேரணியாகச் செல்ல இருப்பதாக எதிர்க்கட்சியினர் அறிவித்து இருந்தனர்.
இன்று மதியம் 12.30 மணியளவில் 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பேரணி செல்ல இருப்பதாகவும் இதற்கான அறிக்கையும் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறை வரை பேரணி செல்ல உள்ள நிலையில் பேரணியை தடுத்து நிறுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறைக்கு சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள நிலையில் சாலை முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் வெளிப்புறத்தில் உள்ள சாலைகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனையும் மீறி பேரணி சென்றால் அவர்களை கைது செய்து அழைத்துச் செல்லவும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.