ஊரடங்கு உத்தரவால் தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கை மூடினாலும், எல்லா பக்கமும் சரக்கு விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்தபோது, டாஸ்மாக்கை மூடியதும் தமிழகம் முழுக்க, கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கள்ளச்சாராயம், ஆறாக பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், மது பிரியர்களும் தள்ளாட்டமில்லாமல் அல்லாட ஆரம்பித்துவிட்டனர். சிலர் மனநலம் பாதிக்கப்படுவதாகவும் செய்திகள் வந்துள்ளது. அதனால் திகைத்துப்போன முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் விவகாரத்தில் லிபரலாக நடந்துக் கொள்ளுங்கள் என்று போலீஸ்க்கு க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால், தற்போது டாஸ்மாக் பணியாளர்கள் மூலம், அரசாங்கச் சரக்கே கள்ள மார்க்கெட்டில் ஏக போகமாக விற்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 100 ரூபாய் விலையுள்ள சரக்கை 500 ரூபாய்க்கும், 500 ரூபாய் சரக்கை 3 ஆயிரம் ரூபாய்க்கு என்று ஆளாளுக்கு இஷ்டத்துக்கு விலையை ஏற்றி சொல்லப்படுகிறது.
"அதுமட்டுமில்லாமல் இப்படி டாஸ்மாக் சரக்கை ஏகத்துக்கும் விலைவைத்து விற்பதால், கொலை, கொள்ளை என்று தற்போது க்ரைம் ரேட் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. சென்னை எண்ணூர் பகுதியில், டாஸ்மாக் சரக்கு வாங்க கூடுதலாக ரூபாய் வேண்டும் என்று தன் மனைவியை அடித்து உதைத்த ஒருத்தரை, அவர் மகன்களே வெட்டிக் கொலை செய்துள்ளனர். இது சாராயத்துக்காக நடந்த கொலை என்று தெரிந்தும், அதைக் குடும்பப் பிரச்சினையால் ஏற்பட்ட கொலை என்று, போலீஸ் உண்மையை மறைத்து விட்டனர். இதுபோல் டாஸ்மாக் சரக்கை ஓவர் ரேட்டில் கள்ள மார்க்கெட்டில் வாங்கறதுக்காகவே குடிமகன்கள் பலரும் வழிப்பறி, கொள்ளை என்று க்ரைம் நடவடிக்கைகளில் இறங்கிட்டதாக சொல்லப்படுகிறது. இதையெல்லாம் போலீஸும் கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.