முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் இந்தியில் பேசுகிறார், ஆனால் எனக்கு இந்தி தெரியாததால் குழப்பம் ஏற்படுகிறது என மிசோரம் முதல்வர் சொரம்தங்கா தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காகப் பிரதமர் மோடி நேற்று முதல்வர்கள் உடனான கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மிசோரம் முதல்வர் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
வழக்கமாக மக்கள் முன் உரையாடும்போதும், அரசியல் தலைவர்களுடன் உரையாடும்போதும் பிரதமர் மோடி இந்தியிலேயே பேசுவது வழக்கம். அந்த வகையில் ஊரடங்கு குறித்து பேசும்போது கூட மக்கள் மத்தியில் இந்தியில்தான் பேசினார் பிரதமர். ஆனால் பிரதமரின் இந்த முடிவு பல்வேறு தரப்பிலும் விமர்சனங்களைப் பெற்றது. நாடே இக்கட்டான நிலையில் உள்ளபோது எடுக்கப்பட்டுள்ள முக்கியமான ஒரு முடிவைக் குறித்து மக்களிடம் பேசும்போது அனைவருக்கும் சென்றடையும் வகையில் பிரதமர் பேச வேண்டும் எனக் கருத்துகள் எழுந்தன. குறைந்தபட்சம் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஒருவரையாவது பிரதமர் மோடி அருகில் வைத்துக்கொண்டு பேச வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், முதல்வர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தி மொழியிலேயே பேசியுள்ளார். இந்தக் கூட்டம் முடிந்து இதுகுறித்து பேசிய மிசோரம் முதல்வர் சொரம்தங்கா, "அவர்கள் அனைவரும் இந்தியில் பேசுகிறார்கள் என்பதால், அங்குள்ளவர்கள் சொன்ன ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியவில்லை. எனக்கு இந்தி தெரியாது" எனத் தெரிவித்தார். பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.