'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தற்போது நாடாளுமன்ற வளாகத்தில்நடைபெற்று வரும் அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைப்பெறும் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். அதே போல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அகிலேஷ் யாதவ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
![PM NARENDRA MODI ALL PARTIES MEETING AVOID WEST BENGAL CM MAMATA BANERJ, ARAVIND KEJRIWAL](http://image.nakkheeran.in/cdn/farfuture/Mv-cjdxUzT-V2Yh1Dk_TuMZtTo7dhHgz3TJX5p5nVk8/1560939719/sites/default/files/inline-images/wb-cm-banerjee-with-media_f6baebea-91b4-11e9-8dac-d1dda9c8fec1.jpg)
உத்தரப்பிரதேச மாநில பகுஜன் சமாஜ்வாதி தலைவர் மாயாவதி செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாட்டில் இருக்கும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைத்திருப்பும் முயற்சி மட்டும்தான். ஏழ்மை, வேலையின்மை, வன்முறைகள் அதிகரிப்பு போன்ற விவகாரங்களில் இருந்து திசைத்திருப்பும் முயற்சி மட்டும்தான். முக்கியமான விஷயம் தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள இருந்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன். வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எச்சரிக்கையாகும், அதுதொடர்பாக ஆலோசனை நடந்தால் கலந்து கொள்வேன் என கூறியுள்ளார்.
![PM NARENDRA MODI ALL PARTIES MEETING AVOID WEST BENGAL CM MAMATA BANERJ, ARAVIND KEJRIWAL](http://image.nakkheeran.in/cdn/farfuture/ifNfetzxyLhDQJA9zYl_LagyLbQNvGrppXs1EpM7pv4/1560939782/sites/default/files/inline-images/modi-party-meet.jpg)
நாடாளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துகிற போது அடிக்கடி தேர்தலை சந்திப்பதால் ஏற்படும் பண இழப்பு தவிர்க்கப்படும். அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்களை அவ்வப்போது தேர்தல் பணிக்கு அமர்த்தும் நிலையை குறைத்துக்கொள்ள முடியும். அடிக்கடி தேர்தல் நடத்துவதால் ஏற்படுகிற நேரம் வீணாவது தவிர்க்கப்பட்டு விடும். நாட்டிலும், எல்லையிலும் பாதுகாப்பு பணியில் உள்ள பாதுகாப்பு படையினரை தேர்தல் பணிகளில் அடிக்கடி ஈடுபடுத்தும் நிலை வராது.
![PM NARENDRA MODI ALL PARTIES MEETING AVOID WEST BENGAL CM MAMATA BANERJ, ARAVIND KEJRIWAL](http://image.nakkheeran.in/cdn/farfuture/oCU5ZYpJapIpCSvfOU3DlQNCMLhcLk1LsLemid01nLc/1560939819/sites/default/files/inline-images/mayawati_pti.jpeg)
அடிக்கடி தேர்தல் வருகிற போது, நடத்தை விதிகளை அமல்படுத்துவதால் புதிய வளர்ச்சித்திட்டங்களை அறிவிப்பதிலும், வளர்ச்சிப்பணிகளை தொடங்குவதிலும் தடங்கல்கள் ஏற்படும். இது தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி உள்ளார். இந்த கூட்டத்தில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.