தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சத்தீஸ்கர் மாநிலம், கோன்டா நகரில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஆட்சியில் ஜாதி, மத அடிப்படையில் பாரபட்சம் இல்லாமல் இருப்பது தான் ‘ராம ராஜ்ஜியம்’. அரசின் திட்டங்களின் பலன்கள் அனைத்தும் எல்லா தரப்பு மக்களிடம் போய் சேரும். அனைவருக்கு நாட்டின் வளர்ச்சியில் இருந்து உரிய பங்கு கிடைக்கும்.
பாதுகாப்பு, வசதிகள் மற்றும் வளங்களின் உரிமைகள் ஆகியவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும். இது தான் ராமராஜ்ஜியம். உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோவில் கட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மேலும், இந்த கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும். அயோத்தியில் உருவான ராமர் கோவில் தான் ராம ராஜ்ஜியம் தொடங்கப்பட்டதற்கான அறிகுறி. இந்த விஷயத்தில் உத்தர பிரதேச மக்களை விட சத்தீஸ்கர் மக்கள் தான் அதிகளவில் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால் சத்தீஸ்கர் மாநிலம் தான் ராமரின் தாய்வழி இடம்
அதே நேரத்தில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட விடாமல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இப்போது கூட சத்தீஸ்கரில் ‘லவ் ஜிகாத்’ மதமாற்றம் ஆகியவற்றை ஆதரிக்கும் நபராக முதல்வர் பூபேஷ் பாகேல் இருக்கிறார். பா.ஜ.க சத்தீஸ்கரில் ஆட்சி அமைந்தால், லவ் ஜிகாத், மாடுகளை கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.