தமிழகத்தில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளையும், புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (26/05/2022) மாலை ஹைதராபாத்தில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், விழா நடைபெற்ற சென்னை வேப்பேரியில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பா.ஜ.க.வின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, விழா நடைபெற்ற இடத்திற்கு செல்லும் வழி முழுவதும் பா.ஜ.க.வினர் மலர் தூவி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், மேள, தாளங்கள், தமிழக பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளும் அதில் இடம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், தமிழக பயணத்தை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நன்றி தமிழ்நாடு, நேற்றைய வருகை மறக்க முடியாதது" என்று குறிப்பிட்டு, நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் என குறிப்பிட்டு 2.07 நிமிட வீடியோவையும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.