கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
அதே நேரம், இந்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திர மாநில முதலவர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
ஆந்திர மாநில முதலமைச்சரும், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஓய்.எஸ்.ஷர்மிளா. இவர் ஓய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் ஷர்மிளா போட்டியிடாமல், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார். இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில், ஓய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார். மேலும் அவர் நடத்தி வந்த ஓய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸில் இணைத்தார்.