மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர். இவர் உதவி ஆட்சியராக சேருவதற்கு முன்பு தனக்கென தனி அலுவலகம், கார் மற்றும் வீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. தான் வைத்த கோரிக்கையை ஏற்பாடு செய்யும்படி உயர் அதிகாரிகளிடம் நச்சரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பூஜாவுக்கு சொந்த அறை வழங்கப்பட்டது. ஆனால், அந்த அறையில் கழிவறை இல்லாததால், அதை நிராகரித்துள்ளார். இதையடுத்து புனே கூடுதல் ஆட்சியர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறைக்கு வெளியே இருந்த கூடுதல் ஆட்சியரின் பெயர் பலகையை தூக்கிவிட்டு, பூஜா கேட்கர் தனது பெயர் பலகையை மாற்றி அந்த அறையை ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் ஒப்பந்தக்காரர் ஒருவர் கொடுத்த விலை உயர்ந்த சொகுசு காரில் விதியை மீறி சைரன் வைத்துக் கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.
பூஜா கேட்கரின் எல்லை மீறிய செயல்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றனர். தொடர் புகார்கள் எழுந்ததால், பூஜா கேட்கர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையில், பூஜா கேட்கர் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பர் சேர்ந்தவர் எனக் கூறியும், பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி எனப் போலி சான்றிதழ் வழங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனதாக சர்ச்சை எழுந்தது. பூஜா கேட்கர் மீதான புகார் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு, தனி நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், பூஜா கேட்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்து மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக ஜூலை 23ஆம் தேதி முசோரியில் உள்ள பயிற்சி மையத்திற்கு திரும்ப வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.