வடகிழக்கு மாநிலங்களில் முன்பு இருந்த பிளவு அரசியலை தற்போது தெய்வீக அரசியலாக மாற்றியுள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து மாநிலத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக தலைவர்கள் அங்கு போட்டிப் போட்டுக்கொண்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று பிரதமர் மோடி சுமௌகெடிமாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாகாலாந்து மக்களின் பாரம்பரிய உடையை அணிந்துகொண்டு கலந்துகொண்டார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாகாலாந்தில் வன்முறை சம்பவங்கள் 75 சதவீதம் குறைந்துள்ளன. ஏராளமான இளைஞர்கள் வன்முறையைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்திற்கு திரும்பியுள்ளனர். நாகாலாந்து மாநிலத்தில் அமைதி, வளர்ச்சி, வளமை ஆகியவற்றையே பாஜக விரும்புகிறது. காங்கிரஸ் டெல்லி முதல் திமாபூர் வரை வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான நிதியை உறிஞ்சியது. அந்த வகையில் வடகிழக்கு மாநிலங்களை ஏ.டி.எம். எந்திரமாகவே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாகாலாந்தில் அரசியல் நிலையற்ற தன்மை இருந்தது. மேலும், அக்கட்சி டெல்லியில் இருந்துகொண்டு வடகிழக்கு மாநிலங்களை ரிமோட் மூலம் இயக்கியது. ஆனால், பா.ஜனதாவோ இந்த 8 மாநிலங்களை அஷ்டலட்சுமியாக பார்க்கிறது. காங்கிரஸுக்கும், அதன் கூட்டாளிகளுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கான கொள்கை 'வாக்களியுங்கள், மறந்துவிடுங்கள்' என்பதுதான். ஆனால், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வடகிழக்கு மாநிலங்களில் முன்பு இருந்த பிளவு அரசியலை தற்போது தெய்வீக அரசியலாக மாற்றியுள்ளோம். மதம் மற்றும் மாநிலத்தின் அடிப்படையில் மக்களிடம் பாஜக எந்தவிதப் பாகுபாடும் காட்டுவதில்லை” என்றார்.